தமிழக மக்களுக்கு அடுத்த ‘ஜாக்பாட்’ தயார்!! பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் தேதி அறிவிப்பு!!!
தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு, வரும் ஜனவரி 9-ந் தேதி முதல் 12-ந் தேதிக்குள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே தைப் பொங்கலுக்கான பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. ரேசன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கம், கரும்புடன் அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலம், உலர் திராட்சை அடங்கிய இந்த பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர, அவசரமாக தொடங்கி வைத்தார்.
இதனால் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தடையில்லை என்றும் கூறப்பட்டது. எனவே உள்ளாட்சித் தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக இந்தப் பரிசுத் தொகுப்பை வழங்கி, வாக்காளர்களை கூடுதலாக குஷிப்படுத்த ஆளும் அதிமுக அரசு திட்டமிட்டது.
ஆனால், இதற்கு தடை கோரி வழக்குத் தொடரப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றமும், தேர்தல் முடியும் வரை பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கக் கூடாது என கண்டிப்பு காட்டியது. இதனால் ரூ .1000 கிடைப்பது போச்சே… என பலரும் புலம்பினாலும், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற பகுதிகளில் வாக்காளர்களுக்கு தடபுடல் கவனிப்பும், பட்டுவாடாவும் ஜரூராக நடந்ததால் ஏக குஷியடைந்தனர்.
தற்போது தேர்தல் முடிந்த நிலையில், அடுத்த ஜாக்பாட்டாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது.வரும் ஜனவரி 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ரூ 1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனவும், விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜன.13-ந் தேதி வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.





