CAA-வையும் NRC-ஐயும் தொடர்பு படுத்தி தவறான தகவல் பரப்பப்படுகிறது
குடியுரிமை சட்டத் திருத்தத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையையும் தொடர்புபடுத்தி தவறான தகவல்களை பரப்பப்படுவதாக உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. இதுகுறித்து விளக்கும் வீடியோ பதிவுகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தம் குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் அமலுக்கு வந்து விட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையின் அம்சங்கள் குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு வீடியோ பதிவில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்து புதிய சட்டத்தின்படி குடியுரிமை பெற்றவர்களின் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையில் குடிமக்கள் பதிவேடு குறித்து எதுவும் பேசவில்லை என்ற பிரதமர் மோடியின் கருத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என குடியரசுத் தலைவரே கூறியுள்ள நிலையில், அதுபற்றி எதுவும் பேசவில்லை என மோடி உண்மைக்கு மாறாக பேசுகிறார் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




