--- --:--:-- --

உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக குவிந்த மனுக்கள்.! தடை வருமா..? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

k

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் தேர்தலுக்கு தடை வருமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த 3 ஆண்டுகளாக இழுபறியாகவே இருந்தது. இப்போது ஊரகப் பகுதி உள்ளாட்சிக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், முறையாக நடத்தப்படாமல், பல குளறுபடிகளுடன் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அவசரம் காட்டுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் ஆளும் கட்சிக்கு சாதகமாக மாநில தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன.

 

எனவே, இட ஒதுக்கீடு, வார்டு மறு வரையறை பணிகளை முழுமையாக முடித்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டு வருகிறது. திமுக, காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் , மதிமுக ஆகிய கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

 

இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலை ஒட்டு மொத்தமாக நடத்தக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும், கரூரைச் சேர்ந்த வாக்காளர் ஒருவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை அனைத்தும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது.

 

ஊரகப் பகுதி உள்ளாட்சிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கால், மனுத்தாக்கல் மந்தமாகவே உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் பலரும் இன்று உச்ச நீதிமன்றம் வழங்கப் போகும் தீர்ப்பை எதிர்நோக்கி காத்துள்ளதே இதற்கு காரணம். எனவே இன்றைய உச்ச நீதிமன்ற உத்தரவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon