கடலூர் மாவட்டம் நடுக்குப்பம் ஊராட்சித் தலைவர் பதவி 50 ரூபாய்க்கு ஏலம் போனதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே போன்று பதவிகள் ஏலம் விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும், மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கிராம ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளை ஏலம் விடும் விவகாரமும் விசுவரூபமெடுத்து வருகிறது.இந்த ஏலம் ரகசியமாக நடத்தப்பட்டாலும், தகவல் தொழில் நுட்ப முன்னேற்றத்தால் வெளியே கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
முதன்முதலாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுக்குப்பம் ஊராட்சி தலைவர் பதவி ரூ.50 லட்சத்திற்கும், துணைத் தலைவர் பதவி ரூ .15 லட்சத்திற்கும் ஏலம் போனதாக தகவல் வெளியாகி, தமிழகம் முழுவதும் பரபரப்புச் செய்தியானது. ஜனநாயக முறையில், தேர்தல் நடத்தி தேர்வு செய்வதை விடுத்து, குத்தகைக்கு விடுவது போல் பதவிகளை ஏலம் விடுவதா? என கண்டனங்கள் ஒருபுறம் குவிந்தாலும், ஏலம் விடும் விவகாரம் தொடரவே செய்கிறது.
கடலூரைத் தொடர்ந்து, ராமநாதபுரம், திருச்சி, தர்மபுரி, விழுப்புரம் என மாநிலத்தின் பல பகுதிகளிலும் உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் விடப்பட்டதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி கூட ரூ 2 லட்சத்திற்கு ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி இந்த ஏலம் பல பகுதிகளிலும் பரவி வரும் நிலையில், இதனைத் தடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, உள்ளாட்சித் தலைவர் பதவிகளை ஏலம் விடுவதைத் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தவும்,கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.