--- --:--:-- --

“நான் அப்பவே சொன்னேன்… கோலியை சீண்டாதீர்கள் என்று…” – அமிதாப் பச்சன்

13

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதலாவது டி20 போட்டி ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். சிக்சர்களும் பவுண்டரிகளும் விளாசினார்.

 

20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. பின்னர் 208 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

 

இதைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தொடர்ச்சியாக சிக்சர், பவுண்டரிகளை விளாசினார். இந்திய அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றார். 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்து இந்தியா அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்தும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

இதில் 6 சிக்சர்கள் 6 பவுண்டரிகளை தெறிக்க விட்டிருந்தார். அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் வில்லியம்ஸ் பந்துவீச்சை விராட் கோலி அடித்து நொறுக்கினார். வில்லியம்ஸ் வீசிய ஒரு பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோலி ஆரவாரமாக வில்லியம்ஸ் கொண்டாடும் நோட்புக் ஸ்டைலில் கொண்டாடினார்.

 

இதற்கு காரணம் கடந்த 2017 ஆம் ஆண்டில் விராட்கோலி விக்கெட்டை வீழ்த்திய வில்லியம்ஸ் நோட்புக் ஸ்டைலில் வழியனுப்பினார். இரண்டு ஆண்டுகள் கழிந்தாலும் வைராக்கியத்துடன் இருந்த கோலி தற்போது தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

 

இதுதொடர்பாக ஆட்டத்தின் முடிவில் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ஜமைக்காவில் நடைபெற்ற போட்டியின்போது எனக்கு நோட்புக் வழியனுப்புதல் கிடைத்தது. அதனால் இவ்வாறு நான் செய்யவேண்டும் என்று நினைத்தேன்.

ஆகவே நோட்புக்கில் செய்தேன் எனினும் ஆட்டம் முடிந்த பிறகு நாங்கள் அனைவரும் புன்னகையுடன் கை குலுக்கினோம். அதுதான் கிரிக்கெட் விளையாட்டு. களத்தில் கடினமாக விளையாடினாலும் எதிரணிக்கு எப்போதும் மதிப்பளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் விராட் கோலியை சீண்டாதீர்கள் என்று எத்தனையோ முறை நான் கூறியிருக்கிறேன். ஆனால் நீங்கள் கேட்கவில்லை.

 

தற்போது அதன் விளைவாக அவருடைய அசாத்திய ஆட்டத்தை பார்க்க முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை பார்த்தாலே அவர்களை கோலி எவ்வாறு சிதறடித்து இருக்கிறார் என்பது தெரிகிறது என பதிவிட்டுள்ளார்.

 

மேலும் அமிதாபச்சன் இந்தி திரைப்படமான அமர் அக்பர் அந்தொனி புகழ்பெற்ற வசனத்தில் குறிப்பிட்டு அறிவுரை வழங்கியிருக்கிறார். இதற்கு பதிலளித்த இந்திய கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டரில் உங்களுடைய வசனம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நீங்கள் எப்போதுமே எனக்கு ஒரு முன்னுதாரணம் என தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon