--- --:--:-- --

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது ஆணையர் பழனிசாமியா? முதல்வர் எடப்பாடி பழனிசாமியா? மு.க.ஸ்டாலின் சந்தேகம்

2

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது ஆணையர் பழனிசாமியா? முதல்வர் எடப்பாடி பழனிசாமியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

 

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார். மேலும் திடீரென மறைமுகத் தேர்தல் என்ற அறிவிப்பு, மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் தொகுதி மறுவரையறை செய்யாதது ஏன்?, இட ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு வெளியிடாதது ஏன்? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி வருகிறார். எனவே முறையாக தேர்தல் நடத்த வேண்டும், இல்லையேல் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்திலும் திமுக சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார். அதில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வரும் 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் தேதியை அறிவிக்காத பழனிசாமி, அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஒரே வரியில் பதிலளித்து விட்டு, செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார். இதனால் நகர்ப்புறங்களுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்து பெரும் சர்ச்சையாகியுள்ளது.

 

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தேதி தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தின் இன்றைய அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையர் பழனிசாமியா? அல்லது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

 

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தலை அறிவித்துள்ளனர்.

இதுவரை உள்ளாட்சித் தேர்தல் மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாகத்தான் நடத்தப்பட்டது. தற்போது கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தது வேடிக்கையாகயாகவும், அதே நேரத்தில் இதில் உள்நோக்கமும் உள்ளது. வார்டு மறுவரையறை பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பதற்கு இதுவரை பதில் இல்லை. உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று தான் உச்ச நீதிமன்றம் சென்றோம்.

 

ஆனால், இப்படி தேர்தலை குளறுபடியாக நடத்துவதால், அதிமுகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது என்றே தோன்றுகிறது. இதனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையர் பழனிசாமியா? அல்லது முதல்வர் எடப்பாடி பழனிசாமியா? என்ற சந்தேகம் கூட எழுகிறது என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon