தினம் தினம் மலைபோல் குவியும் புகார்கள் : குஜராத்தில் நித்யானந்தா ஆசிரமம் மூடல் – சீடர்கள் அதிரடியாக வெளியேற்றம்
சாமியார் நித்யானந்தா மீது தினமும் குவியும் புகார்களை அடுத்து குஜராத் மாநிலத்தில் உள்ள அவருடைய ஆசிரமத்தை அம்மாநில நிர்வாகம் அதிரடியாக மூடியுள்ளது. அங்கு தங்கியிருந்த நித்தியானந்தாவின் சீடர்களும் அதிரடியாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாமியார் நித்தியானந்தா மீது சமீப நாட்களாக பகீர் புகார் எழுந்து பெரும் சர்ச்சையாகி வருகிறது. அதிலும் சிஷ்யைகள் போர்வையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறுமிகளை, பாலியல் ரீதியில் நித்தியானந்தா கொடுமைப்படுத்துவதாக வெளியாகும் செய்திகள் திகில் கிளம்புகின்றன. இந்தப் புகார்களை வெளியுலகுக்கு கொண்டு வந்ததும் அவருடைய முன்னாள் சீடர்கள் தான்.இதில் தனது 3 மகள்களை நித்தியானந்தா கடத்தி வைத்திருக்கிறார் என அவரின் முன்னாள் சீடர் ஜனார்த்தன சர்மா என்பவர் கூறிய புகார்தான் சமீப நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அத்துடன் கனடா நாட்டைச் சேர்ந்த சாரா லாண்ட்ரி என்ற சிஷ்யை, நித்யானந்தா தம்மை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக பகிரங்கமாக கூறிய புகாரும் நித்தியானந்தாவுக்கு எதிராக கிளம்பியது. இது போல் தினம் தினம் பல புகார்கள் நித்தியானந்தாவுக்கு எதிராக கிளம்பியுள்ளன. இந்த சர்ச்சைகளுக்கு இடையே நித்தியானந்தா, தலைமறைவாகி விட்டதாகவும், வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகின.

ஆனால், தலைமறைவான நித்தியானந்தாவோ, தினம் ஒரு வீடியோ வெளியிட்டு, தம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற ரீதியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் நித்தியானந்தா மீது தினம், தினம் குவிந்து வரும் புகார்களைத் தொடர்ந்து, குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் ஹீராபூர் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த நித்யானந்தாவின் ஆசிரமத்தை,அம்மாவட்ட நிர்வாகம் இன்று அதிரடியாக மூடியுள்ளது. தனியார் பள்ளி ஒன்றில் இந்த ஆஸ்ரமம் சட்டவிரோதமாக செயல்படுவதாகக் கூறி ஆஸ்ரமத்தை இழுத்து மூடியதுடன், அங்கிருந்த நித்யானந்தாவின் சீடர்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





