--- --:--:-- --

169 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே வெற்றி…! பாஜக வெளிநடப்பு!!

ry

மகாராஷ்டிரா சட்டப்.பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம் எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது. எதிர்க் கட்சியான பாஜகவோ வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.

 

மகாராஷ்டிராவில் சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்தது.தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் அஜித் பவாரின் ஆதரவை நம்பி கடந்த 23-ந் தேதி பாஜகவைச் சேர்ந்த பட்னாவிஸ் முதல்வர் பதவியேற்றார். அஜித் பவார் துணை முதல்வரானார். அஜித் பவாரின் பின்னால் என்.சி.பி., எம்எல்ஏக்கள் யாரும் வராததாலும், உச்சநீதிமன்றமும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கெடு விதித்ததாலும், பதவியேற்ற 4 நாட்களில் பட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து சிவசேனா – என்.சி.பி.-காங்கிரஸ் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசு கடந்த வியாழனன்று ஆட்சியமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். ஒரு வாரத்தில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அரசுக்கு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டிருந்தார்.

 

இந்நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க, இன்று பிற்பகல் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உத்தவ் தாக்கரே கூட்டியிருந்தார். ஆளுநரால் நியமிக்கப்பட்ட காளிதாஸ் கொலம்ப்கருக்குப் பதிலாக, புதிதாக நியமிக்கப்பட்ட இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்ட என்சிபி கட்சியின் திலீப் வால் சா பாட்டீல் இன்று சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார்.

பிற்பகல் 2 மணிக்கு சட்டப் பேரவை கூடியதும், நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே கொண்டு வந்தார். அப்போது பாஜக எம்எல்ஏக்கள், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கோஷமிட்டபடியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தும் அமளியில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் பேசுகையில், புதிய சபாநாயகரை தேர்வு செய்த பின்பே ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.

 

போதிய அவகாசம் தராமல், நள்ளிரவு ஒரு மணிக்கு அறிவிப்பு வெளியிட்டு திடீரென சட்டப்பேரவையை கூட்டியது சட்டவிரோதம் .விதிமுறைகளை மீறி இன்று சட்டப்பேரவையை கூட்டியதே செல்லாது எனக் கூறினார். இதைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள், ஓட்டெடுப்பை புறக்கணித்து, ஒட்டு மொத்தமாக வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

 

இதைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 169 எம்எல்ஏக்கள் ஆதரவுடன், உத்தவ் தாக்கரே மெஜாரிட்டியை நிரூபித்ததாக அறிவிக்கப்பட்டது.சிவசேனா (56), என்சிபி (54), காங்கிரஸ் (44) என 154 எம்எல்ஏக்கள் மட்டுமின்றி இதரக் கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் 15 பேர் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவளித்தனர்.

Leave a Reply

Right Menu Icon