நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு ..! பட்னாவிஸ் அரசுக்கு கெடு விதித்தது உச்ச நீதிமன்றம்!!
மகாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவின் பட்னாவிஸ் , நாளை மாலை 5 மணிக்குள் சட்டம் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில், பாஜக – சிவசேனா இடையே ஏற்பட்ட உரசலால் புதிய அரசு அமைப்பதில் ஒரு மாதமாக குழப்பம் நீடித்து வந்தது. என் சி.பி. மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சியமைக்கும் முயற்சி கடந்த 22-ந் தேதி வெற்றி பெற்றது. ஆனால் அன்று ஒரே நாள் இரவில் நடந்த அதிரடி திருப்பத்தில் 23-ந் தேதி காலை பாஜகவின் பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாத நிலையில், அவசர அவசரமாக பட்னா விசை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்தும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் சிவசேனா கூட்டணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் கடந்த ஞாயிறன்றும், நேற்றும் காரசார விவாதங்கள் நடைபெற்ற நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு பரபரப்பான தீர்ப்பு வழங்கியது.

முதல்வர் பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு நாளை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் . நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இன்று மாலைக்குள் இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்து, எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இளடக்கால சபாநாயகரே நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள்,
ஜனநாயகத்தின் மாண்பை காப்பாற்றுவது நீதிமன்றத்தின் கடமை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிவசேனா கூட்டணி தரப்பில் 162 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிப்பது முடியாத காரியம் என்றே கூறப்படுகிறது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே பட்னாவிஸ் தமது பதவியை ராஜினாமா செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளதால் மகாராஷ்டிர அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.





