--- --:--:-- --

ஈழத்தமிழர்கள் மீது அக்கறை போல முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்..! தமிழக தலைவர்கள் மீது ராஜபக்சே மகன் பாய்ச்சல்!!

jg

சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என தமிழக தலைவர்கள் வைகோ, ராமதாஸ், திருமாவளவன், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே பாய்ச்சல் காட்டியுள்ளார்.

 

இலங்கையில் உரிமைகளுக்காக போராடிய தமிழர்களை கொன்று குவித்த குடும்பம் ராஜபக்சே குடும்பம் தான். பன்னெடுங்காலமாக போராடி வந்த விடுதலைப் புலிகளுடன் 2009-ல் நடந்த இறுதி யுத்தத்தில், ஈவு இரக்கமின்றி 40 ஆயிரம் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றழித்து ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே தான். அப்போது ராணுவ அமைச்சராக இருந்த அவருடைய தம்பி கோத்தபய ராஜபக்சேவுக்கும் இதில் கூடுதல் பங்கு உண்டு.

 

2009 இறுதி யுத்தத்துக்கு பின்பு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியுற்று, மைத்ரிபால ஸ்ரீசேனா அதிபரானவுடன், ஈழத் தமிழர்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் என்றே கூறலாம். ஆனால் அவர்களின் நிம்மதிக்கு இப்போது வேட்டு வைப்பது போல, 3 நாட்களுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற, இலங்கையில் ஆட்சி அதிகாரம் மீண்டும் ராஜபக்சே குடும்பத்து வசமாகியுள்ளது. கோத்தபய அதிபரான நிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமராவார் என்றும், அவருடைய மகன் நமல் ராஜபக்சேவும் முக்கியப் பதவியை ஏற்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்தத் தேர்தலில் கோத்தபய வெற்றி பெறக் கூடாது என்றே அங்கு வாழும் ஒட்டு மொத்த தமிழர்கள் மட்டுமின்றி, சிறுபான்மை இஸ்லாமியர்களும் எண்ணினர். அதனாலேயே அவருக்கு எதிராகவும் 80% மேலாக வாக்குகளை குவித்தனர். ஆனால் சிங்களர்களின் அமோக ஆதரவில் கோத்தபய வென்றுவிட, ஈழத்தமிழர்கள் மீண்டும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 

கோத்தபய அதிபரானதை தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் ரசிக்கவில்லை. ஈழத் தமிழர்கள் வாழ்வில் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கோத்தபய அதிபரான இந்த நாள் தமிழர்களுக்கு துக்க நாள் என்று குமுறியிருந்தார். இதே போன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமரவளவன், நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் பழ.நெடுமாறன் போன்றோரும் ஐயப்பாடும், வேதனையும் தெரிவித்திருந்தனர்.

 

இதற்கு, தமிழக தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிப்பதாக ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே விமர்சனம் செய்துள்ளார். தங்களது சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் தமிழக தலைவர்கள் சிலர் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் எனக் கூறி நமல் ராஜபக்சே தமது சுய௹பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon