5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் நியமனம்
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர், நெல்லை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை பிரித்து புதிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
5 புதிய மாவட்டங்களின் எல்லை வரையறை குறித்து அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட நிலையில் ஐந்து மாவட்டங்களுக்கும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி நெல்லை மாவட்டத்தை பிரித்து உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்ட ஆட்சியராக ஜி.கே.அருண்சுந்தர் தயாளனும், வேலூர் மாவட்டத்தை பிரித்து உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் ஆட்சியராக சிவன் அருளும், ராணிப்பேட்டை ஆட்சியராக திவ்யதர்ஷினியும், நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு ஆட்சியராக ஏஜான் லூயிஸ், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண் குராலா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் துணை ஆணையராக உள்ள சுகுணாசிங் தென்காசி மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக உள்ள விஜயகுமார் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக உள்ள மயில்வாகனன் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளாராக உள்ள கண்ணன் செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி ஜெயச்சந்திரன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




