--- --:--:-- --

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாதது ஏன்? – மதுரை கலெக்டர் விளக்கம்

2

திருப்பரங்குன்றத்தில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றாததன் காரணங்களை மதுரை ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் விளக்கியிருக்கிறார். திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் என அழைக்கப்படும் கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், தூணில் தீபம் ஏற்றாமல் வழக்கம் போல் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.

 

 

இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், ஆகம விதிமுறைகள் மற்றும் நிலைபெற்ற வழிபாட்டு நடைமுறைகளை பாதுகாக்கும் வகையில், வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்திலேயே இந்த ஆண்டு ஏற்றுவது என அறங்காவலர் குழு தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டது. அதை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டதாகவும், அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இடமான மலைமேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீபமண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

 

அதே நேரத்தில் திருப்பரங்குன்றம் மலையில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அடிவாரப் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், மலை மீது உள்ள தூண் அருகேயும் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியாததற்கு மதுரை ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியிருக்கிறார். தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மதுரை ஆட்சியர் 17 பக்க முதற்கட்ட அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

 

 

அதில் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு மனமார்ந்த மன்னிப்பு கோருவதாக மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா கூறியிருக்கிறார். தொடர்ந்து அந்த அறிக்கையில் திருப்பரங்குன்றத்தில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றாததன் காரணங்களை விளக்கி இருக்கிறார். அதன்படி, தீபம் ஏற்றுவதற்கும் தேவஸ்தானத்தின் அனுமதியை பெறுவதற்கும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்தது எனவும், ஆனால் அறங்காவலர் குழு போட்ட தீர்மானத்தில் வழக்கமான உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்ற முடிவு செய்திருந்ததன் காரணமாக நீதிமன்றம் குறிப்பிட்ட தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை எனவும் அறிக்கையில் மதுரை ஆட்சியர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

 

தீபம் ஏற்ற மாவட்ட நிர்வாகம் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் குழுவினரால் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில் தேவஸ்தானம் 10 பேர் கொண்ட பெயர்களை பரிந்துரைக்கவில்லை என அவர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

 

தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய நபர்களுக்கான அதிகாரம் அளித்து கோவில் நிர்வாகம் எந்த கட்டத்திலும் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கவில்லை எனவும் அறிக்கையில் கூறியிருக்கிறார். உத்தரவில் குறிப்பிட்ட 6 மணி முதல் 6.30 மணி வரை தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு தீபத்தூணில் தீபம் ஏற்ற வரவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்து சமய அறநிலையத் துறை செயலாளருக்கும் மின்னஞ்சலில் நினைவூட்டிய போதும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அதிகாரம் கொண்ட குழு பரிந்துரைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக அறங்காவலர் குழு வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற தீர்மானித்தது என்றும் முதல்கட்ட அறிக்கையில் மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

 

இதனிடையே, மதுரை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மனுதாரர் வி.ராமசுப்பு என்பவர் தாக்கல் செய்த மனுவில் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மாவட்ட ஆட்சியர் மீறியதாக கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதற்கான நடைமுறைகளை செய்யாமல் திட்டமிட்டே வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றியதற்கு மாவட்ட ஆட்சியர் தான் காரணம் என்றும் மனுவில் கூறப்பட்டிருக்கிறது. அவசர மனுவாக விசாரிக்க கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் இன்றே விசாரணைக்கு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon