--- --:--:-- --

துணை சபாநாயகர் தன்னை தாக்கியது உண்மை தான் – கார்த்திக்

3

துணை சபாநாயகர் ரவிசங்கர் புகார் கொடுக்க வந்தவரை தாக்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னை துணை சபாநாயகரும் இன்ஸ்பெக்டரும் மிரட்டி தான் சமாதானம் பேசும் வீடியோவை 6 டேக் எடுத்து வெளியிட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

 

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ரவிசங்கர் வீடு மண்ணச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில் அவர் வீட்டிற்கு தொகுதி கோரிக்கை தொடர்பாக சென்ற கார்த்தி என்பவரை துணை சபாநாயகர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

 

இந்த வீடியோவை பார்த்த பலரும் துணை சபாநாயகர் இதுபோல் செய்யலாமா என்பது குறித்த விமர்சனங்களை சமூக வலைதளங்களில் வைத்து வந்தனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட கார்த்தி, பின்னர் துணை சபாநாயகர் ரவிசங்கருடன் அமர்ந்து புதிய விளக்கம் அளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

 

 

அந்த வீடியோவில் பேசிய அவர், துணை சபாநாயகரைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றபோது அதிகக் கூட்டம் இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைச் சிலர் சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர். இது எங்கள் கட்சிக்குள்ளேயே நடைபெற்ற உள்கட்சி நிகழ்வு. யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். சமூக வலைதளப் பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

 

ஆனாலும் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக துணை சபாநாயகர் தாக்கியது போலான காட்சிகள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. துணை சபாநாயகர் தாக்கியதாக எழுந்த புகாருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 

 

இந்நிலையில் என்னை துணை சபாநாயகரும் இன்ஸ்பெக்டரும் மிரட்டி தான் சமாதானம் பேசும் வீடியோவை 6 டேக் எடுத்து வெளியிட்டார்கள். என்னை துணை சபாநாயகர் தாக்கியதும் கொலை மிரட்டல் விடுத்ததும் உண்மை என பாதிக்கப்பட்ட கார்த்திக் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். துணை சபாநாயகராக இருக்கும் ரவிசங்கர் என்னை அடித்து தரக்குறைவாக அவர் பேசியது உண்மைதான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை துணை சபாநாயகர் வீட்டிற்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக அந்த வீடியோவை எடுத்தனர்.

 

 

அப்படி நான் சொல்லவில்லை என்றால் என்னையும் என் குடும்பத்தினரையும் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர். இதன் காரணமாகவே நான் அது போன்ற வீடியோ வெளியிட்டேன். என் உயிருக்கு பயந்து தான் அது போன்ற வீடியோ எடுத்தேன். இதற்காக நான் அவரிடம் எந்தவித பணமும் வாங்கவில்லை. சோசியல் மீடியாவில் என்னைப் பற்றி தவறாக பேசுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon