அன்பில் மகேஷை நவ.18 வரை காவலில் வைக்க கோர்ட் உத்தரவு
கடந்த தி.மு.க ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில், 117 தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.
தனியார் பள்ளி சங்கத்தின் தலைவர் டி.சி. இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜூன் 27, 2026 அன்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்குச் சொந்தமான சென்னை மற்றும் திருச்சி இல்லங்கள் உட்பட 9 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும், இது தொடர்பாக அவரிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாகப் போலீஸார் தீவிர விசாரணையும் நடத்தினர். அதனைத் தொடர்ந்து அன்பில் மகேஷை நேரில் அழைத்தும் விசாரணை நடத்தினர். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்த ஊழல் புகாரில் சட்டவிரோதமாக நடைபெற்ற பணபரிவர்த்தனைகள் தொடர்பாகவும் அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகின்றன.
இந்நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு கடந்த 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்டு, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே, அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவுக்குப் பதிலளிக்கும் வகையில், நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல் உதவி ஆணையர் ஒருவர் தாக்கல் செய்த பதில் மனுவில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான முத்துக்குமார், பாதுகாப்பாக இருப்பதாகவும், சரியான நேரத்தில் அவர் திரும்பி வருவார் என்றும் அன்பில் மகேஷ் உறுதியளித்ததாக தெரிவித்தது. மேலும், அன்பில் மகேஷுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்ட காவல்துறை தரப்பு, ‘கட்சி நிதி’ என்ற பெயரில் லஞ்சப் பணம் அன்பில் மகேஷிடம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களைச் சேகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த 26 ஆம் தேதி தீர்ப்பு அளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன், தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷை கைது செய்தனர். அன்றைய தினம் இரவு, லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
இந்நிலையில், அன்பில் மகேஷை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்தியமூர்த்தி, உத்தரவுக்காக தள்ளிவைத்து கடந்த 30-ம் தேதி உத்தரவிட்டார். கடந்த திங்கள்கிழமை (நவ.2) மனுவை விசாரித்த நீதிபதி சத்தியமூர்த்தி, மதியம் 1 மணி முதல் வருகிற 4-ம் தேதி வரை அன்பில் மகேஷை போலீசார் காவலில் வைத்து விசாரிக்கலாம் என்றும், ‘அப்போது, அவரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது. மருந்து உள்ளிட்டவைகளை வழங்கவேண்டும். போலீஸ் விசாரணையின்போது, அன்பில் மகேசுடன் அவரது வக்கீல் இருக்கலாம். ஆனால், போலீஸ் நடத்தும் விசாரணையை கேட்க முடியாத தொலைவில் அவர் இருக்கவேண்டும்’ என்றும் குறிப்பிட்டு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
மூன்று நாள் போலீஸ் காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷை நவம்பர் 6 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 நாள் போலீஸ் காவலின் போது துன்புறுத்தப்படவில்லை எனவும் சரியாக உணவு வழங்கினார்கள் எனவும் அன்பில் மகேஷ் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து இருந்தார்.
நீதிமன்ற காவல் நேற்று வெள்ளிக்கிழமையுடன் முடிவுற்ற நிலையில், புழல் சிறையிருந்து காணொலி மூலமாக சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷை சிறைத் துறையினர் ஆஜர்படுத்தினர். நீதிபதி எஸ்.சத்தியமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் இருதரப்பும் காரசாரமான வாதங்களை எடுத்து வைத்தனர்.
பிறகு அன்பில் மகேஷின் மருத்துவ அறிக்கையைப் பரிசீலித்த நீதிபதி, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவலை நவம்பர் 18ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனால், அன்பில் மகேஷ் இந்த ஆண்டு தனது தீபாவளியை சிறையில் தான் கொண்டாடுவார் என்கிற சூழல் உருவாகி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





