சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம்.. இனி தீட்சிதர்கள் இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் பொது தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டது முதல் முறையான நிர்வாகம் நடைபெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பொது தீட்சிதர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, கோயில் நிர்வாகத்தைப் பொது தீட்சிதர்களிடம் ஒப்படைத்த 2014-ஆம் ஆண்டு முதல் முறையான நிர்வாகம் நடைபெறவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், கோயில் வருவாய் குறித்த முழுமையான கணக்குகளை முறையாகச் சமர்ப்பிக்காதது, அன்னதானம் மற்றும் அன்னப்பிரசாதம் பெயரில் நன்கொடை வசூலிப்பது, கோயில் வளாகத்தை உணவகம் உள்ளிட்ட மதம் சாராத செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துவது போன்றவற்றை குறிப்பிட்டு நீதிபதிகள் விமர்சித்தனர். கோயில் வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள், பழமையான பாரம்பரியக் கட்டமைப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
எனவே, ஓய்வுபெற்ற நீதிபதிகள் வி. பரதிதாசன், ஆர். சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் நிர்வாகக் குழுவை அமைத்த நீதிமன்றம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சி. ராஜேந்திரன், பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள் என்றும் தெரிவித்தது.
கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளின் முழுமையான பட்டியலைத் தயாரிப்பது, காணாமல் போன மதிப்புமிக்க பொருட்களை மீட்பது, வாடகை மற்றும் குத்தகை நிலுவைகளை வசூலித்தல் உள்ளிட்ட பணிகளை நிர்வாகக் குழு மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் கோயில் சொத்துகளை மீட்டெடுக்கவும், பழமையான கட்டமைப்புகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மத வழக்கங்களின்படி குடமுழுக்கு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




