--- --:--:-- --

சாதி விவரங்களைக் கட்டாயமாகக் கூடாது!

8

தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு தனியார் கல்வி நிறுவனமோ அல்லது தனியார் நிறுவனமோ தங்களது விண்ணப்பப் படிவங்களில் சாதி அல்லது சமூக விவரங்களை கட்டாயமாகச் சேகரிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் மற்றும் நீதிபதி ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, தீர்ப்பளித்துள்ளது.

 

தமிழ்நாட்டிற்குள் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் விண்ணப்பப் படிவங்களில் சாதி அல்லது சமூக விவரங்களைக் கட்டாயமாகச் சேகரிப்பதைத் தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும், தனியார் நிறுவனங்களில் பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும் வகையில் தகுந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகளை உருவாக்குமாறும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

 

மேலும், பள்ளித் கல்வி (சி-2) துறையின் 31.07.2000 நாளிட்ட அரசாணை எண் 205-ஐ (G.O.Ms.No.205) செயல்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உயர் மற்றும் பள்ளித் கல்வித் துறைகளின் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கக் உத்தரவிடுமாறு கோரப்பட்டது. கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும்போது பெற்றோர்/ மாணவர்கள் தங்கள் மதம்/சாதியைத் தெரிவிக்க வற்புறுத்தப்படாமல் இருப்பதற்கான உரிமை குறித்து கல்வி நிறுவனங்களுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

 

 

அத்தகைய நபர்கள் சம்பந்தப்பட்ட தங்களுக்கு ‘மதமில்லை’ (No Religion) மற்றும் ‘சாதியில்லை’ (No Caste) என்று குறிப்பிட அனுமதிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் (Transfer Certificate) மாணவரின் மதம்/சாதியை கல்வி நிறுவனங்கள் குறிப்பிடக் கூடாது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட 31.07.2000 நாளிட்ட அரசாணை எண் 205 மீறப்பட்டு வருகிறது. அதை மீண்டும் மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும்.

 

மேலும் சாதி குறிப்பிடப்படாவிட்டால், விண்ணப்பதாரர் பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மனுதாரர் சார்பில் குறிப்பிடப்படப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் நீதிபதி ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு சாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை அடைவதற்காக, தமிழ்நாடு அரசு 31.07.2000 அன்று அரசாணை எண் 205-ஐ வெளியிட்டது.

 

இரண்டாம் நிலை பள்ளி இறுதிச் சான்றிதழ் (SSLC) மற்றும் மாற்றுச் சான்றிதழில் (TC) தங்களது மதம் அல்லது சாதியைக் குறிப்பிட விரும்பாதவர்கள், அதில் ‘மதமில்லை’, ‘சாதியில்லை’ எனக் குறிப்பிடலாம் அல்லது அதை காலியாக விடலாம் என்று தமிழ்நாடு அரசாணை தெரிவிக்கிறது.சேர்க்கையின் போதோ அல்லது வேறு எந்த நேரத்திலோ, பெற்றோர் மதம் மற்றும் சாதியை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றால் அல்லது வெளிப்படுத்த இயலவில்லை என்றால், அவர்களை வற்புறுத்தத் தேவையில்லை என்றும் தமிழ்நாடு அரசாணை மேலும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி சாதி அல்லது மதத்தைத் தெரிவிக்க விரும்பாத நபர்கள் கட்டாயப்படுத்தப்படாமல் இருக்க, இந்தத் தமிழ்நாடு அரசாணையை விரிவான விளம்பரத்துடன் விநியோகிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

 

 

மேலும் மாற்றுச் சான்றிதழ் தொடர்பாக, சிலர் சாதியைக் குறிப்பிட விரும்பலாம் என்பதால், சாதியை வெளிப்படுத்தக் கூடாது என்று கட்டாய உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்றும், ஒருவர் சாதியை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றால், தமிழ்நாடு அரசாணையைக் கருத்தில் கொண்டு, அவ்வாறு செய்யத் தேவையில்லை என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. மேலும், தமிழ்நாட்டிற்குள் உள்ள எந்தவொரு தனியார் கல்வி நிறுவனமோ அல்லது தனியார் நிறுவனமோ சாதி விவரங்களை கட்டாயமாகச் சேகரிக்கக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, மனுதாரர் தாக்கல் செய்த பேராணை மனுவை முடித்து வைத்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon