தமிழக அரசு 3-வது கட்டமாக வாங்கிய 700 மெட்ரிக் டன் வெங்காயம்!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால், ரேஷன் கடைகளில் வெங்காயம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்த தமிழக அரசு, இதற்காக ஏற்கனவே 2 கட்டங்களை வெங்காயம் கொள்முதல் செய்திருந்தது. அந்த வகையில் தற்போது 3-வது முறையாக தமிழக அரசின் சார்பில் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைந்ததில் இருந்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஏற்றம் தொடர்ந்து வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களை குறைந்த விலையில் கொடுக்க அரசு முயற்சித்து வருகிறது. இதில் முதற்கட்டமாக ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு வெங்காயம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 2 முறை தமிழக அரசு வெங்காயம் கொள்முதல் செய்துள்ளனது.
வெளி சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கூட்டுறவுத்துறை மூலம் வெங்காயத்தை ரேஷன் கடைசிகளில் விற்பனை செய்யும் தமிழக அரசு ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ35-க்கு விற்பனை செய்து வருகிறது. வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக முதற்கட்டமாக, ஆகஸ்ட் மாத இறுதியில், இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (NAFED) மூலம் 910 மெட்ரிக் டன் மற்றும் என்.சி.சி.எப் (NCCF) மூலம் 65 மெட்ரிக் டன் வெங்காயத்தை அரசு கொள்முதல் செய்தது. குடும்ப அட்டைக்கு 1 கிலோ என்ற வரம்பைப் பின்பற்றி, நியாயவிலைக் கடைகள் மூலம் மாநில அரசு இவற்றை கிலோ ரூ35 வீதம் விற்பனை செய்தது.
தொடர்ந்து 2-ம் கட்டமாக, மானிய விலையில் விற்பனை செய்வதற்காக என்.ஏ.எப்.இ.டி (NAFED) மூலம் 1,414.33 மெட்ரிக் டன் மற்றும் என்.சி.சி.எப் மூலம் 460 மெட்ரிக் டன் வெங்காயத்தை அரசு கொள்முதல் செய்தது. அந்த வரிசையில் தற்போது மூன்றாம் கட்ட மானிய விலை விற்பனைக்காக மாநில அரசு 700 மெட்ரிக் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்துள்ளது. 8,914 நகர்ப்புற நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம், ஒரு குடும்ப அட்டைக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ வெங்காயம் ரூ35 வீதம் விற்பனை செய்யப்படும்.
விற்பனையைத் தொடங்கி வைப்பதற்கு முன்பாக, தொண்டையார்பேட்டையில் உள்ள சரக்கு ரயில் முனையத்திற்கு வந்தடைந்த வெங்காயச் சரக்கை கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்தி ராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ50-க்கு மேலாகவும், சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ60 முதலும் விற்பனையாகி வரும் நிலையில், வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மானிய விலையில் வெங்காயம் வழங்குவதைத் தொடரவும், குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கவும், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்திடமிருந்து (NCCF) இந்த புதிய சரக்கை அரசு கொள்முதல் செய்துள்ளது. வரத்து குறைந்ததன் காரணமாக, வெங்காய விலை ஜூலை மாதத்தில் கிலோ ரூ20-ரூ25 ஆக இருந்து, ஆகஸ்ட் தொடக்கத்தில் ரூ30–ரூ35 ஆக உயர்ந்து, ஆகஸ்ட் இறுதிக்குள் ரூ50-ஐத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





