நவ.2 முதல் சொத்து ஆவணங்களுக்கு காகிதமற்ற பதிவு முறை கட்டாயம்
குடும்ப உறுப்பினர்களிடையே சொத்து உரிமைகளை மாற்றும் தான செட்டில்மென்ட், உரிமை விடுதலை, பாகப்பிரிவினை உள்ளிட்ட 4 வகையான ஆவணங்களுக்கான காகிதமற்ற பதிவு முறை நவம்பர் 2ம் தேதி முதல் கட்டாயமாகிறது. இதற்கான அரசாணையை வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “குடும்ப ஏற்பாட்டு தான செட்டில்மென்ட் பத்திரம், உரிமை விடுதலை பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம் மற்றும் தான செட்டில்மென்ட் ரத்து பத்திரம் ஆகியவற்றை பதிவு செய்யும் பொதுமக்கள், ஆவணங்களை இணையவழியில் தயாரித்து, தேவையான துணை ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பதிவுத்துறை இணையதளம் மூலம் ஆவணம் மின்னணு முறையில் செயலாக்கப்பட்டு, பதிவு முடிந்ததும் ஆவணம் மின்னணு வடிவில் பொதுமக்களின் இணைய கணக்குக்கு அனுப்பப்படும். மேலும், ஆவணம் ‘ஸ்டார்’ தளத்தில் பாதுகாக்கப்படும். காகிதமற்ற பதிவு என்றாலும், சம்பந்தப்பட்ட தரப்பினர் சார்பதிவாளர் முன்பு நேரில் ஆஜராக வேண்டும்.
எனவே அடையாளம் மற்றும் ஆதார் அங்கீகாரத்தை உறுதி செய்வதற்காக இந்த நேரடி சரிபார்ப்பு தொடர்ந்து நடைபெறும். ஆனால் ஆவணங்களை கையாளுதல், எடுத்துச் செல்வது, ஸ்கேன் செய்வது, முத்திரையிடுதல், பக்க எண்கள் இடுதல் உள்ளிட்ட காகிதம் சார்ந்த பணிகள் தவிர்க்கப்படும்.
‘ஸ்டார் 3.0’ திட்டத்தின் 2ம் கட்டமாக இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக மனை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களின் முதல் விற்பனைப் பத்திரங்களை எங்கிருந்தும் பதிவு செய்யும் வசதி கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஜனவரி 22ம் தேதி ‘ஸ்பிரிண்ட்-1’ திட்டத்தின் கீழ் காகிதமற்ற பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.” என அதில் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




