முதல்வர் வருகைக்காக தடுக்கப்பட்ட சிபிஐ வேட்பாளர் வாகனம்!
தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதி கட்ட பரப்புரை இன்றுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமாவை ஆதரித்து இன்று அத்தொகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டார். அந்தவகையில், தாராபுரம் – கரூர் சாலை வீராச்சிமங்கலம் பிரிவு பகுதி வழியில் முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் வருகை தர இருந்த நேரத்தில், அவ்வழியாக நாதக வேட்பாளர் கார்த்திகாவும் வந்ததால், அவர் செல்வதற்கான வழியில்லாமல் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், இரு தரப்பினருக்கும் வழியை ஏற்படுத்தி கொடுத்த நிலையில், நாதகவினர் இந்த சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனைத் தொடர்ந்து நாதக வேட்பாளர் கார்த்திகா உட்பட அக்கட்சியினர் 200 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இந்த விவகாரம் பரபரப்பான நிலையில் தற்போது, தாராபுரம் அலங்கியம் சாலையில், முதல்வர் வருகைக்காக சிபிஐ வேட்பாளர் லட்சுமணன் பிரச்சார வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் பிரச்சார வாகனம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிபிஐ கட்சியினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஒலி பெருக்கி மூலம் சிபிஐ கட்சியினர் காவல் துறையினரை கண்டித்து முழக்கம் எழுப்பினர். மேலும், சிபிஐ ஆதரவுடன்தான் ஆட்சி நடக்கின்றது என்பதை காவல் துறை மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் ஆவேசமாகவும் பேசினர். வாக்குவாதத்தைத் தொடர்ந்து சிபிஐ வேட்பாளர் லட்சுமணன் வாகனத்தை போலீசார் அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





