5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கு!
தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து ஜூலை 10-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே மனுதாரர், எதிர்மனுதாரரான விஜய் உள்ளிட்டோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் நடத்துவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. ஆறு மாத கால அவகாசம் உள்ளது.
தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் முன்பு மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டுமெனில், தொகுதியில் இரு வேட்பாளர் மட்டுமே போட்டியிட்டிருக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில், இரண்டாவது இடத்தைப் பிடித்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது என நீதிபதி பி.பி.பாலாஜி, தீர்ப்பளித்துள்ளதாகவும், தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த வாதத்துக்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின்படி, இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தாலும், இடைத்தேர்தல் அறிவிக்க முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி அமர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




