--- --:--:-- --

6 இஸ்லாமியர் வீடுகளில் சிறப்பு புலனாய்வுத் துறையினர் சோதனை!

9

தஞ்சாவூரில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தடை செய்யப்பட்ட இயக்கத்தில் சேர்ப்பதாக வந்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் நேற்று ஒரே நேரத்தில் 6 பேரின் வீடுகளில் சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்தில், தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில இளைஞர்களைக் குறிவைத்துத் தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் இணைக்கும் முயற்சிகள் நடப்பதாகச் சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இந்தத் தகவலின் அடிப்படையிலும் மற்றும் தீவிர விசாரணையின் தொடர்ச்சியாகவும், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திடம் முறையான அனுமதி பெறப்பட்டது.

 

 

இதனைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பி சார்லஸ் மேற்பார்வையின் கீழ், காவல்துறையினர் தஞ்சாவூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். குறிப்பாக, தஞ்சாவூர் கீழவாசல் எஸ்.என்.எம் நகரைச் சேர்ந்த ஜாகீர் உசேன் மற்றும் அவரது சகோதரர் அப்துல், டவுன் கரம்பை காவேரி நகரைச் சேர்ந்த உமர் முக்தார் மற்றும் அவரது சகோதரர் யாசல் அப்துல், கீழவாசல் ராமசாமிபேட்டையைச் சேர்ந்த சம்சுதீன், மற்றும் கீழவாசல் ரகுமான் நகரைச் சேர்ந்த சேக்ஃபரீத் ஆகிய 6 பேரின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

 

இந்த சோதனையின் போது, தடை செய்யப்பட்ட இயக்கம் மற்றும் மதம் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள், 5 செல்போன்கள், ஒரு லேப்டாப் மற்றும் பென்டிரைவ்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை காவல்துறையினர் கைப்பற்றிச் சென்றனர். இந்த திடீர் நடவடிக்கையானது தஞ்சை சரகத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

 

 

அதேவேளையில், காவல்துறையினரின் இந்த சோதனைக்கு உள்ளான குடும்பத்தினரும், சம்பந்தப்பட்ட நபர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாங்கள் எத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றும், இஸ்லாமிய இளைஞர்களைச் சீர்படுத்தும் மற்றும் சமூக சீர்திருத்தப் பணிகளில்தான் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதுகுறித்து கரம்பையைச் சேர்ந்த உமர் முக்தார் தெரிவிக்கையில், “கஞ்சா மற்றும் போதைப்பொருள்களுக்கு இளைஞர்கள் அடிமையாகாமல் தடுக்கவும், அவர்களைத் தவறான சிந்தனைகளுக்கு ஆளாகாமல் இஸ்லாத்தின் சரியான புரிதலுடன் சீர்படுத்தவுமே நாங்கள் பயிற்சி அளிக்கிறோம். இதில் இஸ்லாமிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், சமூக சீர்திருத்தங்கள் குறித்தும், நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பது குறித்தும் மட்டுமே பேசுகிறோம்.

 

ஆனால், இதைக் காவல்துறையினர் தீவிரவாதப் பிரசாரம் செய்கிறீர்களா எனக் கேள்வி எழுப்புகின்றனர். நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டுதான் அனைத்தையும் செய்கிறோம், எதையும் மறைக்கவில்லை” என்று தனது தரப்பு நியாயத்தைப் பதிவு செய்தார். சமூக சீர்திருத்தப் பணிகளுக்காக நடத்தப்பட்ட வகுப்புகளா அல்லது தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடைய ரகசிய நடவடிக்கையா என்ற கோணத்தில் சிறப்பு புலனாய்வுப் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon