இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்க த.வெ.க. தயாரா?
மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், “ஊழலுக்கு எதிரான அரசியல் பயணம் உண்மை என்றால் இடைத்தேர்தலில் இடதுசாரி வேட்பாளர்களை தமிழக வெற்றி கழகம் ஆதரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ”கம்யூனிஸ்ட் தோழர்கள் சில நேரம் வந்து பேசுவதுதான் வருத்தமாக இருக்கிறது.
கடந்த ஆட்சியில் சி.எம்.டி.ஏ., டாஸ்மாக் உள்ளிட்ட துறைகளில் ஊழல் நடைபெற்றதா இல்லையா? முன்னிலை அமைச்சர்கள் பணம் வாங்கினார்களா இல்லையா? இந்தத் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தியிருக்கும் கம்யூனிஸ்ட் தோழர்களால் நெஞ்சை நிமிர்த்தி, கடந்த திமுக ஆட்சியில் ஊழல் இல்லை என சொல்ல முடியுமா?” என பேசியிருந்தார்.
தனி பெரும்பான்மை இல்லாத தவெக அரசு இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சியை நடத்திவரும் சூழலில், புதிய தலைமைச் செயலகம், இடைத் தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கருத்து முரணுடன் இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது பதிலடிகளைத் தெரிவித்து வருகின்றனர். நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன், “அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு திடீரென ஏன் எங்கள் மீது கோபம் என எனக்கு தெரியவில்லை.
அவர் சொல்லும் இடதுசாரிகளின் தயவில்தான் இந்த ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவை தங்களது ஆதரவை திரும்பப் பெற்றால் இந்த அமைச்சரவையே இருக்காது. சண்முகமும், வீரபாண்டியனும் எப்போது இதனைச் (ஆட்சிக்கான ஆதரவு வாபஸ்) சொல்வார்கள் என ஆளுநர் காத்திருக்கிறார். இதனை ஆதவ் அர்ஜுனா தெரிந்துதான் பேசுகிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை” என பதிலடி கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசனும் இந்த விவகாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்ததாவது; “ஊழலுக்கு எதிராக எல்லா காலங்களிலும் நெஞ்சை நிமிர்த்தி அரசியல் செய்பவர்கள் கம்யூனிஸ்ட்கள். ஊழல் செய்தவர்கள் மீது தமிழக வெற்றிக் கழகம் அரசு உறுதியாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நிச்சயம் நாங்கள் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்போம்.
கடந்த காலத்தில் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளுக்கு அனுமதி கொடுக்காமல் ஆளுநர் தான் நிறுத்தி வைத்திருந்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு அனுமதி கொடுக்காத ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக ஆதவ் அர்ஜுனாவும், தமிழக அமைச்சர்களும் பேசுவார்களா? உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக பேசுவார்களா? பேச வேண்டும்.
இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு வேட்பாளர்களும் ஊழலுக்கு எதிராக என்றைக்காவது பேசி உள்ளனரா? இடதுசாரி வேட்பாளர்கள் இரண்டு பேரும் ஊழலுக்கு எதிராக நேர்மையான அரசியலுக்காக தங்கள் வாழ்க்கையை முழுமையாக செலவிட்டவர்கள். ஊழலுக்கு எதிரான அரசியல் பக்கம் நிற்பதாக இருந்தால் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்கும் முடிவை தமிழக வெற்றி கழகம் எடுக்க வேண்டும். அதுதான் ஊழலுக்கு எதிராக துணிந்து நிற்பதாக அர்த்தம்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு வேட்பாளர்களும் ஊழலுக்கு எதிராக பேசிய ஆதாரத்தை வெளியிடுங்கள். ஊழலுக்கு எதிரான அரசியல் பயணம் உண்மை என்றால் இடதுசாரி வேட்பாளர்களை தமிழக வெற்றி கழகம் ஆதரிக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




