--- --:--:-- --

யார் என்னை கொச்சைப்படுத்தினாலும், வரலாற்றை மாற்றவே முடியாது!

02

மிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் குறித்து கடந்த 7ஆம் தேதி முதலமைச்சர் விஜய் பதிலுரை கொடுத்தார். அப்போது திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த முதலமைச்சர் விஜய், மிசா கைதுகள் குறித்தும் பேசினார். அப்போது, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மிசாவில் கைதானதை குறித்து சைகை செய்து முதலமைச்சர் விஜய் பேசினார்.

 

அதற்கு கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல கட்சியினரும், அரசியல் தலைவர்களும் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “என் செய்கை உள்நோக்கம் கொண்டதில்லை” என ட்விட்டர் மூலம் விளக்கமளித்தார் முதலமைச்சர் விஜய். இந்நிலையில் முதலமைச்சர் விஜயின் செய்கைக்கு, இன்று காணொளி மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

 

 

தனது வீடியோவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மிசா காலத்தில் தான் எதிர்கொண்ட இன்னல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “எமர்ஜென்சி காலத்தில், மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி மிசாவிற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தியவர், அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள். அதனாலேயே, அன்றைய ஒன்றிய அரசால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக ஆட்சி கலைக்கப்பட்ட மறுதினமே, என்னை கைது செய்ய என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது கலைஞர், ‘பையன் வீட்டில் இல்லை, பிரசாரத்திற்கு சென்றிருக்கிறான். நாளை வந்தவுடன் நானே ஃபோன் செய்கிறேன். வந்து கைது செய்து கொள்ளுங்கள்’ என்றார்.

 

அதன்படி அடுத்தநாள் நான் வந்ததும், காவல்துறையை வரச்சொல்லி என்னை கைது செய்ய சொன்னார். நான் சிறை சென்றபோது, அங்கு எனக்கு பல கொடுமைகள் நடந்தன. கைதான எங்கள் அனைவரையும், அடைத்ததே தொழுநோயாளிகள் இருக்கும் அறையில்தான். 10 பேரை மிகச்சிறிய அறையில் அடைத்துவைத்து, சின்ன பானையையும் அங்கு வைத்து ‘அதில்தான் அத்தனை பேரும் சிறுநீர் கழித்துக் கொள்ள வேண்டும்’ என்பார்கள். மிகவும் துர்நாற்றமான இடத்தில், எங்களை அடைத்து வைத்ததுடன், இரவில் தூங்கவிடாமல் பூட்ஸ் காலால் மிதிப்பார்கள்.

 

 

நீங்கள்கூட சட்டமன்றத்தில் தாடையில் கைவைத்து காட்டினீர்களே, அது கரெக்ட்தான். இன்றும் அந்தத் தழும்புகள் இருக்கின்றன. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு, முக்கியமாக தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் போராடுவோருக்கு இதுமாதிரியான அடக்குமுறைகள் எப்போதும் இருந்துள்ளன. போராளிகளெல்லாம், இதையெல்லாம் கடந்துதான் வந்திருக்கிறோம். எதிர்த்து போராடுவதும், விளைவுகளை சந்திப்பதும் எங்களுக்கு புதிதல்ல. நீங்கள் கொள்கைத் தலைவராக சொல்லும் அண்ணா காலத்தில் இருந்து, திமுக-வின் வரலாறே இதுதான். அந்த வரலாற்றில் நானும் இருக்கிறேன் என்பது பெருமையே. யார் என்னை கொச்சைப்படுத்தினாலும், வரலாற்றை மாற்றவே முடியாது. அது காலத்திற்கும் அப்படியேத்தான் இருக்கும். சந்தேகமென்றால், சட்டமன்றத்தில் ஒரு லைப்ரரி இருக்கிறதென சொன்னீர்களே… அங்கே எல்லா ஆவணங்களும் இருக்கிறது. அங்கே போய் என் போராட்ட வரலாறை படித்துப் பாருங்கள். உண்மை என்னவென தெரியும்.

 

 

நீங்கள் முதலமைச்சர் ஆனதும், என்னை சந்திக்க என் வீட்டிற்கு வந்தீர்களே… அப்போது நான் உங்களை கரம்பிடித்து வரவேற்றேன். அச்சமயத்தில் நீங்கள் என்னிடம் ‘தேர்தல் பிரச்சாரத்தில் உங்களை அதிகம் விமர்சித்து பேசிவிட்டேன், ஐ அம் சாரி சார்’ என்றீர்கள். நான், ‘பரவாயில்லை பிரதர். அதையெல்லாம் நான் மனசுல வச்சுக்கல. இப்போ நீங்க ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். அந்த கண்ணியத்துடன் இனி பேசுங்க’ என்றேனே… அதையெல்லாம் நீங்க மறந்துட்டீங்க போல. திரும்பவும் சொல்றேன். ஒரு முதல்வருக்கான கண்ணியத்துடன் உங்கள் வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும்” என்றுள்ளார் அவர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon