கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி..!
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகம் பேசுபொருளானது முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தோல்வி. கொளத்தூர் தொகுதியின் எம்எல்ஏவாக மூன்று முறை இருந்தவர் மு.க. ஸ்டாலின்.
அவர் தோல்வி எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வென்றது திமுகவில் அவருடன் பயணித்த வி.எஸ். பாபு. 2006 சட்டப்பேரவை தேர்தலிலேயே புரசைவாக்கம் தொகுதியில் வி.எஸ். பாபு திமுக சார்பில் போட்டியிட்டவர். அதன்பின் தமிழகம் வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதில் இணைந்த வி.எஸ். பாபு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அதன்படி ஸ்டாலினை விட கிட்டத்தட்ட 8 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து வெற்றிக்கு பிறகு வி.எஸ். பாபு காட்டிய சைகை இணையதளங்களில் அதிகம் கவனம் பெற்றது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த வி.எஸ். பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மூச்சுதிணறல் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர். இன்று காலை தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதியான நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை வழங்கி கண்காணித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




