சேற்றில் புதைந்திருக்கும் உடல்கள்..!
நேபாளத்தில் தற்போதைய நிலை என்ன? மீட்புப் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது உள்ளிட்ட தகவல்களுடன் காத்மண்டுவில் இருந்து நியூஸ் 18 செய்தியாளர் அருணிமா அளித்த பிரத்யேக தகவல்களைப் பார்க்கலாம். நேபாளம், ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். வெள்ளத்தில் பாலங்கள், சாலைகள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால், மீட்புப் படையினர் பாதிப்படைந்தப் பகுதிகளைச் சென்றடைவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், நேபாள ராணுவம் தொடர்ந்து மீட்புப் பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இந்தச் சூழலில், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திரிசூலி மற்றும் ரசுவா பகுதிகளுக்கு நேரில் பயணித்த நியூஸ்18 குழு அங்கிருக்கும் நிலை குறித்தான செய்திகளை வழங்கிவருகிறது.
அதன்படி திரிசூலி மற்றும் ரசுவா பகுதியில் தற்போதைய நிலை குறித்து நியூஸ்18 செய்தியாளர் அருணிமா கொடுத்த பிரத்யேக தகவல்கள் குறித்து பார்ப்போம். செய்தியாளர் அருணிமா கூறியதாவது; “நேற்று மதியம், இரவு நேரங்களில் மழை பெய்தது. வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றுக்கு அருகே வசிக்கும் மக்களை வெளியேறுமாறு நேபாள அரசாங்கம் நேற்று கூட எச்சரித்தது.
ஆற்றின் வழித்தடத்தில் கரையோரம் இருந்த அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. எந்த வீடுகளோ, கடைகளோ, கட்டடங்களோ இங்கு இல்லை. எனவே அடுத்து வெள்ளம் ஏற்பட்டால் ஆற்றின் வேகம் அதிகமாக இருக்கும். தற்போது காத்மண்டுவில் மிதமான வெப்பம் இருக்கிறது. ஆனால் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று வெள்ள எச்சரிக்கை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திரிசூலியில் பல கிராமங்களுக்கு செல்வதற்கான பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. திரிசூலி மற்றும் ரசுவா பகுதியில் இருந்து நியூஸ் 18 குழு மட்டுமே தகவல்களை வெளியிட்டு வருகிறது.
அனைத்து தகவல் பரிமாற்றக் கம்பிகளும் அடித்துச் செல்லப்பட்டன. இங்கிருந்த சந்தைகள், கடைகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. சேற்றில் பல சடலங்கள் சிக்கி உள்ளன. இந்த நிலையில் மழை பெய்தால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மீட்புக் குழுவினரால் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை.
சுமார் 300 இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நிமிடமும் பலர் நியூஸ் 18-ஐ அழைத்து தங்கள் உறவுகள் குறித்த தகவல்களைக் கேட்கிறார்கள். தற்போது இங்கு சவாலாக இருப்பது தகவல் பரிமாற்றம்தான். மின்சாரம் இல்லை. தொலைபேசி இணைப்பு இல்லை” எனத் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




