விளக்கம் தரவேண்டிய அந்த அமைச்சர் அவையில் இல்லை – உதயநிதி ஸ்டாலின்
சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் விவகாரம் பற்றி விளக்கம் சொல்ல வேண்டிய ‘அந்த அமைச்சர்’ இன்றைக்கு அவையில் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் விமர்சித்தார்.கோவை மாணவன் கொல்லபட்டது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முறையாக விளக்கமளிக்கவில்லை எனக்கூறி, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் என்ற 19 வயது இளைஞர், போதைப்பொருள் கடத்தும் கும்பல் குறித்து காவல்துறையிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். போதைப்பொருளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். அமுதன் யார் மீது புகார் அளித்தாரோ, யார் போதைப்பொருளைக் கடத்துகிறார்கள், யார் சப்ளை செய்கிறார்கள் என்று தெரிவித்தாரோ, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அதற்கு மாறாக, போதைப்பொருள் சப்ளை செய்யும் கும்பலைக் காவல்துறையினர் அழைத்து, “அமுதன்தான் உங்களைப் பற்றி அனைத்து விவரங்களையும் கொடுத்திருக்கிறார்” என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல் அமுதனைத் தாக்கி, ஐந்து நாட்களுக்கு முன்பு படுகொலை செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், நேற்று முன்தினம் திருவான்மியூரில் இதேபோன்று போதைப்பொருள் தொடர்பான விவகாரத்தில் தனுஷ் என்ற இளைஞரும் சுமார் 20 பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தொடர்ந்து போதைப்பொருள் காரணமாக இன்றைக்கு பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதையெல்லாம் சுட்டிக்காட்டி, அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக, இன்றைக்கு நான் மட்டுமல்ல; எதிர்க்கட்சித் தலைவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களும் சட்டப்பேரவையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசியிருக்கிறோம். ஆனால், இதற்கெல்லாம் எந்தவிதமான சரியான பதிலும் இந்த அரசிடம் இல்லை. மாறாக, எங்கள் மீது மீண்டும் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள். “உங்களுடைய அரசு என்ன செய்தது?” என்று கேட்டு, தங்களுடைய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதற்கு தெளிவான விளக்கம் அளிக்காமல், எங்கள் மீது மீண்டும் பழியைப் போடும் வழக்கத்தை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், நான் பலமுறை கடந்த மூன்று மாதங்களாகச் சொல்லி வருகிறேன். எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்பதே சரியாகத் தெரியாத நிலை உள்ளது. அதற்குக் காரணம் என்னவென்றால், ஒரு காலத்தில் அமைச்சர்களுக்கு அதிகாரம் இருந்தது. அரசைப் பற்றி எந்த ஒரு விளக்கத்தைக் கேட்டாலும் எழுந்து நின்று பதில் சொல்லும் அதிகாரம் அவர்களுக்கு இருந்தது. ஆனால், இந்த அரசில் அந்தந்த துறை அமைச்சர்கள், அந்தந்த துறைக்கான பதிலையே சொல்ல மறுக்கிறார்கள்.
இன்றைக்கு சட்டம்-ஒழுங்கு பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். போதைப்பொருள் விவகாரம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். அந்த அமைச்சர் இன்றைக்கு அவைக்கு வரவே இல்லை. அதற்கான பதிலையும் அவர் சொல்லவில்லை.
அமைச்சர் சரத்குமார் போதை பொருள் பயன்படுத்தியது போலான வீடியோ தற்போது வெளியே வந்துள்ளது, எங்கள் ஆட்சியில் வீடியோ வெளியாயிருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம். ஆனால் இந்த அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் சொல்லிய பதில் மூலம் போதை பொருள் பயன்படுதியதை ஒத்துக்கொள்கிறாரா.? என கேள்வி எழுப்பினார்.
மேலும், இவற்றையெல்லாம் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகம் அவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது. மீண்டும் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்வோம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




