நான் 12 கிலோமீட்டர் ஓடுவேன்.. என்னோடு ஓட தயாரா?- விஜய்க்கு சவால் விட்ட சீமான்
சென்னை பல்லாவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காகத் தமிழ்நாடு முதல்வர் விஜய் 3 கிலோமீட்டர் ஓடியதைச் சுட்டிக்காட்டினார். “3 கி.மீ., 12 கி.மீ. ஓட்டம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் போதைப்பொருள் பிரச்சினை தீராது; 12 கிலோமீட்டர் நான் ஓடுவேன், என்னோடு ஓட முதல்வர் விஜய் தயாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், “போதைப்பொருளை ஓடி ஒழிக்கக் கூடாது, தேடி ஒழிக்க வேண்டும். ஓடினீர்களே, அந்த போதைப்பொருள் எல்லாம் ஒழிந்துவிட்டதா? எதற்காகக் கோடி கோடியாய்ச் செலவு செய்து தெரு தெருவாக விளம்பரம் செய்கிறீர்கள்?” என்று முதல்வரைப் போலச் சிரித்துக் காட்டி, தனது பாணியில் விமர்சித்தார்.
அரசு போதைப்பொருள் ஒழிப்பைப் பற்றிப் பேசும் அதேவேளையில், அரசே நடத்தும் மதுக்கடைகளில் (TASMAC) விற்கப்படும் மதுவும் ஒரு போதைப்பொருள்தானே எனக் கேள்வி எழுப்பிய சீமான், சில மதுக்கடைகள் மூடப்பட்டதாக விளம்பரம் செய்வதால் உண்மையான மாற்றம் எதுவுமில்லை என்றார்.
பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் அரசு திட்டங்களுக்கு அதிகளவில் விளம்பரம் செய்வதை “செய்தி/விளம்பர அரசியல்” என்று குற்றம்சாட்டிய அவர், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு விளம்பரம் கொடுப்பதற்குப் பதிலாகச் செயல்பாடே முக்கியம் என்று வலியுறுத்தினார்.
தற்போதைய ஆட்சி விளம்பரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டும் வகையில், “Only reels, no rules” (ஒன்லி ரீல்ஸ் தான், நோ ரூல்ஸ்) என்று சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய சீமான், “கரூர் கூட்ட நெரிசல் விபத்திற்கு காரணம் யார்..? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்..? நீங்கள் தேவாலயத்தில் முட்டிக்கால் போட்டு வழிபட்டதெல்லாம் உண்மை என்றால் சொல்லுங்க யார் காரணம் என்று..? பாதிக்கப்படவர்களுக்கு அரசு வேலை கொடுத்து அவர்களை விலைக்கு வாங்குவது ஏன்..?” என்று முதலமைச்சர் விஜயை நோக்கி கேள்வி எழுப்பினார்.
மேலும், தங்கள் கட்சி மக்கள் இயக்கம் என்பதால் மக்களிடமிருந்தே வாக்குளையும் வலிமையையும் கேட்பதாகத் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பென்ஸ் கார் வாங்கியதாக எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மக்கள் அளிக்கும் திரள்நிதியில் (கட்சி நிதியில்) ஒரு தேநீர்கூட அருந்த மாட்டோம் என்று உறுதியளித்த அவர், பென்ஸ் கார் தமக்குச் சொந்தமானது அல்ல என்றும், அது தமது மருமகன் சொந்தப் பணத்தில் வாங்கி நிறுத்திவிட்டுப்போன கார் என்றும் விளக்கம் அளித்துள்ளார். திரள்நிதியைத் திருடுவதாக எழும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள அவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
“இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்று கொலை வெறியில் காத்திருக்கிறேன்” நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் இடைத்தேர்தலில் தாமே நேரடியாகக் களமிறங்கக்கூடும் என்பதை உணர்த்தும் வகையில் அவர் வெளியிட்டுள்ள இந்தச் சூசகமான தகவல், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் களத்தில் தீவிரமாகச் செயல்படத் தயார் நிலையில் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாகப் பேசியுள்ள அவரது பேச்சு, கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.



