--- --:--:-- --

வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை..!

02

காமன்வெல்த் பளுத்தூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 3வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

 

 

இந்தியா சார்பில் 123 பேர் கொண்ட அணி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகின்றனர். இதில் ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி பங்கேற்றார். ஸ்னாட்ச் பிரிவில் 126 கிலோ எடையைத் தூக்குவதற்கான தனது முதல் முயற்சியில் தோல்வி அடைந்த அவர், தனது இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றார்.

 

 

அதன்பின் 129 கிலோ எடையைத் தூக்க மேற்கொண்ட இறுதி முயற்சி தோல்வி அடைந்ததால் ஸ்னாட்ச் பிரிவில் அவரது சிறந்த செயல்பாடாக 126 கிலோ பதிவானது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில், முதல் முயற்சியில் 158 கிலோவைத் தூக்கத் தவறினாலும், மேலும் 2 கிலோ எடையைச் சேர்த்து இரண்டாவது முயற்சியில் வியக்கத்தக்க வகையில் 160 கிலோவைத் தூக்கினார். இதனால் ஒட்டுமொத்தமாக 286 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை தட்டித் தூக்கினார்.

 

 

இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

 

 

ராஜா முத்துப்பாண்டி சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon