முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. தற்போது திமுக சட்டமன்ற கொறடாவாக இருக்கும் அவர், கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் நிலையில் கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஒப்பந்தம் பெற லஞ்சம் வாங்கப்பட்டதாக ஒப்பந்ததாரர்கள் அண்மையில் பேட்டியளித்திருந்தனர்.
இந்த நிலையில் தான் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் ஆழ்வார்பேட்டை மற்றும் திருவண்ணாமலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு சொந்தமாக உள்ள 13 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தங்களுக்கு லஞ்சம் வாங்கப்பட்டதாக ஒப்பந்ததாரர்கள் கூறிய நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், லஞ்சம் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் இந்த சோதனை நடைபெறுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.





