--- --:--:-- --

கலைவாணர் அரங்கில் 2 நாள் எம்.எல்.ஏ.க்கள் பயிற்சி கூட்டம்..!

5

மிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான (எம்.எல்.ஏ) 2 நாள் பயிற்சி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று முதல் (ஜூன் 16) தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு நிகழ்வைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குத்துவிளக்கேற்றி முறைப்படி தொடங்கி வைத்தார். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், முதல்முறையாக எம்.எல்.ஏ-க்களாக 146 பேர் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சட்டமன்ற நடைமுறைகள், விதிமுறைகள், மரபுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த இரண்டு நாள் பயிற்சி கூட்டம் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

இந்நிகழ்வில் நிதி, சட்டம் மற்றும் சட்டப்பேரவை அலுவல் துறையைச் சார்ந்த முதன்மைச் செயலாளர்கள் கலந்து கொண்டு எம்.எல்.ஏ-க்களுக்கு சட்டப்பேரவையின் விதிகள் குறித்தும், அங்கு பின்பற்றப்பட வேண்டிய மரபு குறித்தும் விரிவாக விளக்கமளித்து தெளிவுபடுத்துகின்றனர். இக்கூட்டம் காலை 10:30 மணிக்குத் தொடங்கி மாலை 5:30 மணி வரை நடைபெறுகிறது. நாளையும் (2-ம் நாள்) பயிற்சி கூட்டம் தொடர உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

புதிய எம்.எல்.ஏ-க்கள் மட்டுமல்லாமல், அனுபவமிக்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் எனச் சபாநாயகர் முன்னரே அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும் முழுமையாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். வி.சி.க சார்பில் அமைச்சர் வன்னி அரசு, ஐ.யூ.எம்.எல் சார்பில் அமைச்சர் ஷாஜகான், காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சர் மேலூர் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், தி.மு.க கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களும் இதில் கலந்து கொண்டனர். அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ம.க. சார்பில் சௌமியா அன்புமணி அவர்களும், பா.ஜ.க சார்பில் போஜராஜன் அவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

 

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பயிற்சி கூட்டத்தைத் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் முழுமையாகப் புறக்கணித்துள்ளனர். தி.மு.க தரப்பில் இருந்து எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரும் வரவில்லை. அதேபோல், கம்யூனிஸ்ட் (இடதுசாரி) கட்சி எம்.எல்.ஏ-க்களும் இந்த கூட்டத்தைத் தவிர்த்துள்ளனர். சட்டமன்றத்தில் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க-வின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கூட இன்றைய கூட்டத்திற்கு வரவில்லை. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாகச் சங்கராபுரம் தொகுதியில் வென்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ ராகேஷ் மட்டும், ஒட்டுமொத்த அ.தி.மு.க தரப்பிலிருந்தும் ‘ஒரே ஒரு’ நபராகப் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்று அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon