--- --:--:-- --

தரையிறங்கும் போது உடைந்து நொறுங்கிய ராணுவ விமானம்

5

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் இன்று (சனிக்கிழமை) இந்திய விமானப்படைக்கு (IAF) சொந்தமான அன்டோனோவ் ஏஎன்-32 (Antonov AN-32) ரக ராணுவ போக்குவரத்து விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில், இரண்டு அதிகாரிகள் உட்பட 5 விமானப்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

விமானத்தில் இருந்த 6 பேரில் ஒருவர் மீட்கப்பட்டு, தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

விமானப்படை வட்டாரங்களின்படி, இன்று காலை 10 மணியளவில் ஜோர்ஹாட்டில் இருந்து சாபுவா பகுதிக்கு பாராசூட் பயிற்சிப் பணிக்காக இந்த விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் அவசரமாக தரையிறங்க அனுமதி கோரியுள்ளது.

அதன்படி ஜோர்ஹாட் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகி, அதற்கு இணையாக இருந்த டாக்ஸிவேயைக் கடந்து பாய்ந்தது. இதில் விமானம் பயங்கர சத்தத்துடன் இரண்டு துண்டுகளாக உடைந்து, அடுத்த சில நொடிகளில் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்தவுடன் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

 

இந்த விபத்தில் தாய்நாட்டிற்காக தங்களது உயிரைத் தியாகம் செய்த 5 வீரர்களின் விவரங்களை இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஸ்குவாட்ரன் லீடர் (Sqn Ldr) பிரசாந்த் சிங்,பிளைட் லெப்டினன்ட் (Flt Lt) சுபம் குமார், சார்ஜென்ட் (Sgt) ஜிதேந்திர சர்மா, அக்னிவீர்வாயு (Agniveervayu) கேமராம் குமாவத், அக்னிவீர்வாயு (Agniveervayu) டேனிஷ் ஆலம்.

 

 

இதுகுறித்து இந்திய விமானப்படை தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தங்கள் கடமையைச் செய்யும்போது உச்சக்கட்ட தியாகத்தை செய்த 5 வீரர்களின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். துயரமடைந்துள்ள அவர்களின் குடும்பத்தினருக்கு விமானப்படை என்றும் உறுதுணையாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், விபத்துக்கான ஆரம்பகட்ட விசாரணைகள் மற்றும் விபத்து நடந்த இடத்தின் மேலாண்மைப் பணிகள் நடந்து வருவதால், முதற்கட்ட முடிவுகள் வரும் வரை யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

கடந்த 10 ஆண்டுகளில் 3-வது பெரிய விபத்து : கடந்த 1984-ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனிடமிருந்து வாங்கப்பட்ட இந்த ஏஎன்-32 விமானங்கள், இந்திய விமானப்படையின் மிக முக்கிய போக்குவரத்து வாகனங்களாகச் செயல்பட்டு வருகின்றன. எனினும், கடந்த 10 ஆண்டுகளில் நடக்கும் 3-வது பெரிய ஏஎன்-32 விபத்து இதுவாகும். 2016-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடந்த முந்தைய இரண்டு விபத்துகளில் 42 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜூலை 22, 2016: சென்னையின் தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து போர்ட் பிளேயர் நோக்கிச் சென்ற ஏஎன்-32 விமானம் வங்காள விரிகுடா கடலுக்கு மேல் பறந்தபோது மாயமானது. இதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்தனர்.

ஜூன் 3, 2019: அருணாச்சல பிரதேசத்தின் மேசூகா நோக்கி

 

ச் சென்ற ஏஎன்-32 விமானம் சீன எல்லைக்கு அருகே மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் 13 வீரர்கள் உயிரிழந்தனர். தற்போது ஜோர்ஹாட்டில் நடந்துள்ள இந்த விபத்து ராணுவ வட்டாரங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon