--- --:--:-- --

திமுக ஒரு நச்சுப்பாம்பு – ம.தி.மு.க அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ்

3

பாம்புக்குப் பால் வார்த்தாலும் அது நஞ்சைத்தான் கக்கும்; அதுபோல் திமுக ஒரு நச்சுப்பாம்பு என்று ம.தி.மு.க அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் தி.மு.க மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு அமைந்துள்ள நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வென்ற ம.தி.மு.க-வுக்குள் தனிச்சி ன்ன விவாதங்கள் வலுத்து வருகின்றன.

 

 

இச்சூழலில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன்ராஜ், தில்லுமுல்லுக்குச் சொந்தக்காரர்களான தி.மு.க-வுடன் ம.தி.மு.க தொடரக் கூடாது என்பதே ஒட்டுமொத்த நிர்வாகிகளின் விருப்பம் என்றும், வைகோ தி.மு.க-வை விட்டு விலகி த.வெ.க-வுடன் புதிய கூட்டணி அமைக்கும் வரை நடக்கும் அரசியல் நகர்வுகளைத் தாங்கள் தூரத்தில் இருந்தே ரசிக்கப் போவதாகவும் அதிரடியாகப் பேசியுள்ளது தி.மு.க – ம.தி.மு.க கூட்டணியில் பெரும் விரிசலையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவில் விஜய் தலைமையிலான த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்றபோது, காங்கிரஸ் கட்சி, தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி முதலில் ஆதரவு அளித்தது. அடுத்து, சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி.க, ஐ.யூ.எம்.எல் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சரானார். காங்கிரஸ், வி.சி.க, ஐ.யூ.எம்.எல் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளன.

 

தி.மு.க கூட்டணியில் உள்ள ம.தி.மு.க இந்த தேர்தலில் 4 தொகுதியில் தி.மு.க-வின் உதயசூரியன் போட்டியிட்டது. தேர்தல் முடிவில் ம.தி.மு.க சீர்காழி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. த.வெ.க தலைவர் விஜய் முதலமைச்சரானதும் மற்ற கட்சி தலைவர்களை நேரில் சென்று வாழ்த்து பெற்றார். அந்த வகையில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 

 

இதைத் தொடர்ந்து, ம.தி.மு.க முதன்மைச் செயலாளரும் திருச்சி தொகுதி எம்.பி-யுமான துரை வைகோ, தனது தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனை சரியாக பராமரிப்பு இல்லாதது குறித்து கூறியது உடனடியாக சரி செய்யபட்டது. இதற்கு துரை வைகோ முதலமைச்சர் விஜய்க்கு நன்றி கூறினார்.

 

 

அதுமட்டுமில்லாமல், ம.தி.மு.க-வில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்ற கருத்துகளும் எழுந்துள்ளன. தற்போதுவரை ம.தி.மு.க, தி.மு.க கூட்டணியில் நீடிகிறது. இருப்பினும், ம.தி.மு.க தலைவர்கள் அவ்வப்போது தி.மு.க-வை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த சூழலில்தான், ம.தி.மு.க அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ், “பாம்புக்குப் பால் வார்த்தாலும் அது நஞ்சைத்தான் கக்கும்; அதுபோல் தி.மு.க ஒரு நச்சுப்பாம்பு” என்று தாக்கியிருப்பது தி.மு.க – ம.தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ், “பாம்புக்குப் பால் வார்த்தாலும் அது நஞ்சைத்தான் கக்கும்; அதுபோல் தி.மு.க ஒரு நச்சுப்பாம்பு. தில்லுமுல்லுக்குச் சொந்தக்காரர்களான தி.மு.க-வினருடன் ம.தி.மு.க இருக்கக்கூடாது என்பதே கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகிகளின் கருத்து. ம.தி.மு.க-வை அடியோடு அழிக்கவே தி.மு.க நினைக்கிறது.

 

நல்லது செய்வது போல் நடித்துக் கெடுதல் செய்யும் தி.மு.க-வை விட்டு விலகி, த.வெ.க போன்ற கட்சிகளுடன் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ புதிய கூட்டணி அமைக்கும் வரை, தற்போதைய அரசியல் சூழலைத் தாங்கள் தூரத்தில் இருந்தே ரசிப்போம்” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் தி.மு.க-வை இப்படி அதிரடியாகத் தாக்கி பேசியிருப்பது தி.மு.க – ம.தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon