--- --:--:-- --

எங்களுக்கே பாதுகாப்பு இல்லைன்னா எப்படி? டெல்லியில் போராட்டத்தில் குதித்த போலீஸ்

டெல்லி போராட்டம்

மக்களை பாதுகாக்கும் தங்களுக்கே பாதுகாப்பு இல்லை; தங்களை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் சீருடையுடன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கடந்த 2ஆம் தேதி, டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது முற்றி, இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் வாகனங்கள் சூறையாடப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன ; 20 போலீசாரும், வழக்கறிஞர்கள் சிலரும் காயமடைந்தனர். நீதிமன்ற வளாகமே போர்க்களமாக மாறியது.

 

அத்துடன் நிற்காமல், டெல்லி கர்கர்டூமா நீதிமன்றத்திலும், நேற்று போலீசார், வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இங்கு நடந்த தகராறில், போலீஸ்காரர் ஒருவரை வழக்கறிஞர்கள் தாக்கும் வீடியோவும் வெளியாகி கொந்தளிப்பை அதிகமாக்கியது.

 

இந்நிலையில், பொதுமக்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள தங்களுக்கு வழக்கறிஞர்களால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக்கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லி ஐ.டீ.ஓ பகுதியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை, சீருடையுடன் போலீசார் இன்று காலை முற்றுகையிட்டனர்.

 

அத்துடன், வழக்கறிஞர்களின் தாக்குதலை கண்டித்து, தங்களது உடையில் கருப்பு ரிப்பன்களை அவர்கள் கட்டி இருந்தனர். போலீசாரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பதிலுக்கு, போலீசாருக்கு எதிராக டெல்லியில் வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்திருப்பதால், தலைநகர் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Leave a Reply

Right Menu Icon