--- --:--:-- --

தமிழக அமைச்சரவை மாற்றமா ? 2 பேர் வெளியே; 4 பேர் உள்ளே..! இறக்கை கட்டி பறக்கும் யூகங்கள்!!

ops

முதலமைச்சர் எடப்பாடியார், நேற்று திடீரென ஆளுநரை சந்தித்தாலும் சந்தித்தார்; அவ்வவுதான், தமிழக அரசியலிலும், அதிமுக வட்டாரத்திலும் ஒரே பரபரப்பாகிவிட்டது. அமைச்சரவையில் மாற்றம் வரப்போகிறது, புதிதாக பொறுப்பேற்கபோகும் அமைச்சர்களின் பட்டியல் மாலையில் வெளியாகும் என்றெல்லாம் இந்தச் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது. ஆனால் சந்திப்பு முடிந்தும் எந்த அறிவிப்பும் வெளியாகாமல் சஸ்பென்ஸ் நீடித்தாலும், அமைச்சரவையில் இருந்து 2 பேர் நீக்கப்பட்டு, 4 பேர் புதிதாக நியமிக்கப்படலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுகவிலும், ஆட்சியிலும், எத்தனையோ அதிரடி திருப்பங்கள் அரங்கேறி விட்டன. ஜெ. உடல் நலமின்றி இருந்த போது பொறுப்பு முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வமே, ஜெ. மறைந்த நாளிலேயே முதல்வராக பதவியேற்றார். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அப்படியே மீண்டும் அமைச்சர்களாக தொடர்ந்தனர். கட்சியின் தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்றார்.

 

அதன்பின், ஓ.பன்னீர் செல்வத்தின் முதல்வர் நாற்காலிக்கு ஆப்பு வைக்க சசிகலா தரப்பு முடிவு செய்தது. ஆட்சியும், அதிகாரமும் ஒரே தலைமையின்கீழ் வரவேண்டும் என்ற கோஷத்தை, ஜெ. சமாதி முன் நின்று அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் முதலில் முழங்க, அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என அடுத்தடுத்து முழக்கமிடத் தொடங்கினர். இதனால் ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்த முதல்வர் பதவி, சசிகலா அன்ட்கோவால் பறிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டது.

இதனால், வேறுவழியின்றி முதல்வர் பதவியை காவு கொடுத்து விட்டு போயஸ் கார்டனில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ், நேராக ஜெயலலிதா சமாதி சென்று, அங்கு கண்ணீரும் கம்பலையுமாக பேட்டியளித்தார். அப்போது  ஓபிஎஸ், அம்மாவின் சாவில் மர்மம் உள்ளது என்றும், கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற சசிகலா அன்ட் கோவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்குவதாக அறிவித்தார். அவர் பின்னாலும், கணிசமான அதிமுக புள்ளிகள் அணி திரள, அதிமுகவும் இரு அணியானது.

 

அதன்பின் கூவத்தூரில், பெரும்பான்மை அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டது, சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டும், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையால் முதல்வர் கனவு நிறைவேறாமல் போனது, எடப்பாடி பழனிசாமி திடீர் முதல்வரானது என பல்வேறு காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறின. ஓ.பி.எஸ் மற்றும் அவர் பின் சென்ற அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தவிர்த்து, ஜெ.அமைச்சரவையில்  இருந்த அனைவரும் மீண்டும் அமைச்சர்களாகினர். கூடுதலாக கே.ஏ.செங்கோட்டையனுக்கு மட்டும் அமைச்சர் பதவி லக்காக கிட்டியது.  அதிமுகவோ இபிஎஸ்., ஓபிஎஸ் என இரு பிரிவுகளாகி, எடப்பாடி தலைமையிலான அரசு எத்தனை நாளைக்கு ? என தமிழக அரசியல் களம் பரபரப்பாகி கிடந்தது.

 

சசிகலா சிறை செல்ல, கட்சியின் துணை பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன் கட்சியையும் . ஆட்சியையும் ஆட்டிப் படைக்க முயன்றார். திடீரென அவரை ஓரங்கட்டிய எடப்பாடி ஆதரவு கொங்கு மண்டல அமைச்சர்கள், இபிஎஸ்-ஓ.பி.எஸ் அணிகள் இணைய காரணமானார்கள். ஓ.பி.எஸ், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் ஆனார். அமைச்சரவை அப்படியே தொடர்ந்தது.

 

எடப்பாடி தலைமையிலான இந்த ஆட்சி, நீடிக்குமா? எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்றெல்லாம் பேசப்பட்டு நித்திய கண்டம் பூரண ஆயுசு என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் மத்திய பாஜகவின் சொல்படி, வளைந்து, நெளிந்து கொடுத்து, கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுக் காலத்தை நிறைவு செய்து விட்டது. இடைப்பட்ட காலத்தில் எத்தனை சோதனைகள், அமைச்சர்கள் பலர் மீது எத்தனை ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அமைச்சரவை மாற்றம் என்பது மட்டும் நடக்கவேயில்லை. தேன் கூட்டில் கை வைத்த கதையாகி விடும் என்பதால், ரொம்ப நாசூக்காக அமைச்சரவையில் மட்டும் கை வைக்காமலே இருந்து வந்தார் முதல்வர் எடப்பாடி .

 

தற்போது இடைத்தேர்தல்களில் தொடர் வெற்றி, கட்சியிலும் தன்னை ஸ்ட்ராங்காக்கிக் கொண்ட எடப்பாடி, முதல் முறையாக அமைச்ரைவையிலும், அதிரடி ஆபரேசன் செய்ய முடிவெடுத்து விட்டார் என்று கடந்த சில நாட்களாகவே பரபரப்பான பேச்சாக இருந்தது. இந்நிலையில் தான் நேற்று திடீரென கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, முதல்வர் எடப்பாடி சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அமைச்சரவையில் மாற்றம் வரப்போகிறது; அதற்கான ஒப்புதலைப் பெறவே இந்தச் சந்திப்பு; இன்று இரவே புதிய அமைச்சர்கள் யார்? என்ற அறிவிப்பு வெளியாகும் என்ற பேச்செல்லாம் அதிமுக வட்டாரத்தில் இறக்கை கட்டிப் பறக்கத் தொடங்கின.

 

ஆனால், கவர்னருடான  அரை மணி நேர சந்திப்பு முடிந்து வெளியே வந்த முதல்வர் எடப்பாடி தரப்பிடம் இருந்தும், ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்தும் எந்த அறிவிப்பும் வெளியாகாததால் பெரும் ஏமாற்றமாகி விட்டது. மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு குறித்து ஆளுநரிடம், முதல்வர் எடப்பாடி எடுத்துரைத்ததாக மட்டுமே தகவல்கள் கசியவிடப்பட்டன. திருவள்ளுவர் சிலை அவமதிப்பு விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆளுநரிம் முதல்வர் எடப்பாடி, முக்கியமாக எடுத்துரைத்ததாகக் கூறப்பட்டது.

இருந்தாலும், இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமே, அமைச்சரவை மாற்றம் பற்றியது தான் என்று அதிமுக மேலிட வட்டாரங்கள் அடித்துச் சொல்கின்றன. இதில் 2 அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்கப்படுவது உண்மை. இதில், அந்த 2 அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ஆண் அமைச்சர்களை கை வைக்க எடப்பாடிக்கு இன்னமும் தயக்கமாம். இதனால் நன்றாக செயல்படவில்லை என்ற காரணம் காட்டி வட மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவர் மற்றும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவர் என 2 பேர் கட்டப்பட உள்ளார்களாம்.

 

பதிலுக்கு 4 புதிய அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற உள்ளார்களாம். இதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள், தலா 2 பேர் இடம் பெற உள்ளனராம். கொங்கு மண்டலத்தில் இபிஎஸ் தரப்பில் தோப்பு அடைமொழி கொண்டவரும், ஓபிஎஸ் தரப்பில், அவருடன்  தர்மயுத்தம் தொடங்கிய முன்னாள் அமைச்சரும் அடக்கமாம். அதே போல் தென் மாவட்டத்தில் 2 பேருக்கு அமைச்சர் பதவி உறுதியாம். இதில் சீனியரான மதுரையைச் சேர்ந்த புள்ளிக்கு இபிஎஸ் ஏற்கனவே கொடுத்த வாக்குப்படி அமைச்சர் பதவி உண்டாம்.

 

இவர் சில மாதங்களுக்கு முன்பு, ஆட்சிக்கு எதிராக திடீரென குரல் கொடுத்ததால், அமைச்சர் பதவி கொடுப்பதாகக் கூறி சமாதானம் செய்யப்பட்டார் என்பதும் கூடுதல் தகவல். மற்றொருவர் முன்னாள் அமைச்சரான ஓ.பி.எஸ்.ஆதரவாளர் ஆவார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற இவருடைய பங்களிப்பு முக்கியமானதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பரிசாக பக்கத்து தொகுதி எம்எல்ஏவான இவருக்கு அமைச்சர் யோகம் என்றும் கூறப்படுகிறது.இதனால் தமிழகத்தில் ஆளும் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon