உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம் – வைகோ பரபரப்பு பேச்சு
திமுக கூட்டணியில் குறைவான தொகுதிகளை ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்தம் செய்தது தொண்டர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கெல்லாம், அதிக இடங்களை கொடுத்து விட்டு, தங்களுக்கு குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணியில் போட்டியிட்டு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறோம். மற்ற கட்சிகளுக்கெல்லாம் அதிக இடங்களை கொடுத்தார்கள். 10 இடங்கள் + ராஜ்யசபா, 8 இடம் கொடுத்தார்கள். எங்களுக்கு நான்கு இடங்கள்தான் கொடுத்தார்கள். இது எங்கள் தோழர்கள் மத்தியில் சிறு சங்கடத்தை ஏற்படுத்தியது என்றார்.
“திமுக ஆதரவோடு போட்டியிட்டு, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு நன்றிகூட தெரிவிக்கவில்லை. எங்கள் மனதில் தனிச் சின்னத்தில் நின்று இருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதனால் தோழர்கள் மத்தியில் சிறு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் ராஜசபாவில் இடம் வாங்கிவிட்டு தற்பொழுது மந்திரி சபையிலும் இடம் வாங்கி விட்டார்கள். அவர்களுடன் எங்களை எப்படி ஒப்பிட்டு பேச முடியும்.” என்றும் கேள்வி எழுப்பினார்.
விசிகவோடும் எங்களை ஒப்பிட்டு எப்படி பேச முடியும் என கேள்வி எழுப்பிய அவர், ஆதங்கம் தொண்டர்களின் மனதில் இருக்கிறது. அதனை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அப்படி நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டோம். பொதுக்குழுவில் ஆற அமர பேசி, அதற்கு பிறகுதான் முடிவெடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.





