--- --:--:-- --

காவல் துறையினர் விடுப்பு எடுக்க திடீர் தடை விதித்த டி.ஜி.பி.

TN Police

ராமர் கோவில் விவகாரம் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதால், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள், மறு உத்தரவு வரும் வரை விடுப்பு எடுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய், வரும் நவம்பர் 17இல் ஓய்வு பெறுகிறார். இதுவரை அவர் விசாரித்து, தீர்ப்பை தள்ளி வைத்த வழக்குகளில், 17ஆம் தேதிக்கு முன்பு தீர்ப்பு அளிக்க உள்ளார்.

 

இதில் முக்கியமானது, அயோத்தியில் ராமஜென்ம பூமி வழக்கில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்காகும். இதை, தலைமை நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு விசாரித்து, தீர்ப்பு அளிக்க உள்ளது.

 

அதுமட்டுமின்றி, சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனு; ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மத்திய அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு நிராகரித்து; இதை மறுஆய்வு செய்யக்கோரிய வழக்கிலும் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

 

மேலும், ரபேல் விவகாரத்தில் காவலாளியை திருடன் என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக, ராகுல் காந்தி கூறியிருந்தார். இந்த தவறான குற்றச்சாட்டு தெரிவித்ததாக தொடரப்பட்ட அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளது. அதிலும் தீர்ப்பு வெளிவரலாம் என்று தெரிகிறது.

 

இதில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் எதிரொலியாக, நவம்பர் 10 தேதி முதல், மறு உத்தரவு வரும் வரை காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon