--- --:--:-- --

தவெகவிற்கு ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்கள் பதவி நீக்கம்..!

1

1967-ல் ஹரியானாவில் கயா லால் என்ற சட்டமன்ற உறுப்பினர் ஒரே நாளில் 3 கட்சிகளுக்கு தாவினார். இதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி விட்டு கட்சி தாவி, அரசுகளை கவிழ்க்கும் நடைமுறையில் ஈடுபட்டனர். இதனை தடுக்கும் பொருட்டு, 1985 ஆம் ஆண்டு, 52 ஆவது சட்டத் திருத்தம் மூலம், கட்சி தாவல் தடை சட்டம் 10 ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

 

அதன்படி, ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர், தானாக முன்வந்து, தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து விலகினால், அவர் தனது உறுப்பினர் பதவியை இழப்பார். அல்லது, கட்சி பிறப்பிக்கும் உத்தரவுக்கு மாறாக வாக்கெடுப்பில் வாக்களித்தாலோ, வாக்கெடுப்பைப் புறக்கணித்தாலோ பதவி இழக்க நேரிடும். பின்னர், 91ஆவது அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, சட்டமன்றக் கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பிரிந்தால் அது கட்சிப்பிளவு என்று கருதப்பட்டு பதவி பறிப்பு தடுக்கப்பட்டது.

 

இதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் மற்றும் நடைமுறை பிரச்னைகள் எழுந்த நிலையில், உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் முக்கிய தீர்ப்புகள் மூலம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதில், முக்கியமானது, கடந்த 2023 ஆம் ஆண்டு சிவசேனா கட்சி தொடர்பான வழக்கில், அரசியல் கட்சி தலைவர் மட்டுமே, சட்டப்பேரவை குழுத் தலைவரையும், கொறடாவையும் நியமிக்கும் அதிகாரம் படைத்தவர் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் தனிக்குழுவாக சேர்ந்து, அரசியல் கட்சி தலைவரின் உத்தரவை மீறி செயல்படவோ, கொறடாவை நியமிக்கவோ அதிகாரம் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் சூழலுடன் ஒப்பிடுகையில், அதிமுக கட்சி விதிப்படி, சட்டமன்ற குழுத் தலைவர் மற்றும் கொறடாவை நியமிக்க எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

 

 

அதே போன்று, சட்டப்பேரவையில் மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்கள் கட்சி தலைமையை மீறினால், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதும் தவறான புரிதல் என கூறப்படுகிறது. அதாவது, இந்திய அரசியலமைப்பின் 10 ஆவது அட்டவணைப்படி, ஒரு கட்சி மற்றொரு கட்சியுடன் இணையும் போது மட்டுமே, சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

மேலும், அரசியல் கட்சி, சட்டமன்றக் கட்சி என தனித்தனியாக கிடையாது என்றும் 10 ஆவது அட்டவணையின் உட்பிரிவு 1-பி மற்றும் சி-யில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதனை 1998-ல் மாயாவதி எதிர் மார்கண்டேய சந்த் வழக்கிலும் உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியது.

 

 

அதாவது, சட்டமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்களை கொண்ட குழுவை, அரசியல் கட்சியாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, அதிமுகவை தவெகவுடன் இணைத்தால் மட்டுமே, மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு தேவை என்றும், தவெகவிற்கு ஆதரவு அளித்ததால், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், பதவி நீக்கத்திற்கே வழிவகுக்கும் எனவும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon