--- --:--:-- --

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி – இன்று இரவு 8:30 மணிக்கு மோடி உரை

6

களிர் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது தொடர்பான அரசியல் சட்டத்திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். மத்திய பாரதிய ஜனதா அரசு, வரும் 2029-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தத் திட்டமிட்டிருந்தது.

 

இதற்காக 131-வது அரசியல் சட்டத்திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டது. இதில் 131-வது அரசியல் சட்டத்திருத்த மசோதாவிற்கு லோக்சபாவில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால் அது தோல்வியடைந்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 298 எம்பிக்களும், எதிராக 230 எம்பிக்களும் வாக்களித்தனர்.

 

மசோதா நிறைவேற பெரும்பான்மைக்கு 352 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், போதிய ஆதரவு இல்லாததால் இது தோல்வியைத் தழுவியது. இதேபோல், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவும் நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வியடைந்தது. மொத்தம் 489 பேர் வாக்களித்த நிலையில், ஆதரவாக 278 வாக்குகளும் எதிராக 211 வாக்குகளும் கிடைத்தன.

 

எனினும், இது அரசியல் அமைப்பு திருத்த மசோதா என்பதால் நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் இந்த மசோதாவும் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மசோதாக்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், பிரதமர் தனது உரையில் என்ன பேசப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நாடு முழுவதும் மக்களிடையே எழுந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon