ஆதவ் அர்ஜுனா தொகுதியில் பிரச்சாரத்தை திடீரென ரத்து செய்த விஜய்..!
தவெக தரப்பில் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் நிலையில், இன்று அங்கு அக்கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். இந்நிலையில், அந்தப் பிரச்சாரத்தை திடீரென ரத்து செய்துள்ளார். தவெக தலைவர் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதில், பெரம்பூர் தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய், அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். பெரம்பூரைத் தொடர்ந்து இன்றே கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளிலும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, இதற்கான அனுமதியும் பெறப்பட்டது. இந்நிலையில், பெரம்பூரில் பிரச்சாரம் முடித்துக்கொண்டு கொளத்தூருக்கு செல்ல போதிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு சரியாக மேற்கொள்ளப்படவில்லை என தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தவெக தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், பெரம்பூரில் இருந்து கொளத்தூர் வந்து தவெக வேட்பாளர் பாபுவுக்கு பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், அங்கு சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து வில்லிவாக்கம் செல்ல திட்டமிட்டிருந்தார். அங்கு தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரிக்க இருந்தார். இந்நிலையில் வில்லிவாக்கம் தொகுதிக்கான பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்துள்ளார். இது குறித்து வில்லிவாக்கம் தொகுதியில் விஜயின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட செயலாளர் பூக்கடை குமார் அறிவித்துள்ளார்.
அவர் தனது அறிவிப்பில், பாதுகாப்பு சரியாக இல்லாத காரணத்தால் விஜயால் வர முடியவில்லை. கொளத்தூரிலும் பேச முடியவில்லை. எனவே இங்கு வேறு ஒரு நாள் வருவார் என்று தெரிவித்துள்ளார். இதேபோல் பிரசாரம் ரத்தானதற்கான காரணம் குறித்து தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது: “இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரின் தமிழகம் முழுவதற்குமான முதற்கட்ட பிரசாரமாக சென்னை பெரம்பூரில் தொடங்கப்பட்ட நிலையில், அங்கே நடந்த வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரசாரத்திற்குச் செயல்படுத்தப்பட்டதுபோல, தன்னிச்சையாக இந்த பிரசாரங்களுக்குக் கலந்துகொள்ள வரும் பொதுமக்களுக்கும் அந்த இடங்களுக்குச் செல்லும் வழிகளில் தன்னிச்சையாகத் திரளும் பொதுமக்களுக்கும் சரியான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்துதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமல்லாமல், அங்கே செல்வதற்கான வழிகளிலும் சென்னை பெருநகர காவல்துறை செயல்படுத்தாததால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.





