மனைவியை தீ வைத்து கொளுத்திய ராணுவ வீரர் !
குஜராத்தில் தனது மகளை எரித்துக் கொன்ற மருமகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த பெண்ணின் தந்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரன். ராணுவ வீரரான இவர் மனைவி ரேணுகா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குஜராத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து ரேணுகா படுகாயம் அடைந்து இருப்பதாக திருவண்ணாமலையில் உள்ள அவரது தந்தைக்கு கடந்த 27ஆம் தேதி தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் குஜராத் சென்றபோது ரேணுகா மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்துகொண்டதாக அங்கு இருந்தவர்கள் கூறுகின்றனர்.
இறுதி சடங்குகள் முடிந்த நிலையில் தனது தாய் ரேணுகாவை தந்தை நாகேந்திரனே தீ வைத்து எரித்து கொன்றதாக அவர்களின் மகள் யோகி ஸ்ரீ கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரேணுகாவின் குடும்பத்தினர் நாகேந்திரன் மீது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளனர்.





