--- --:--:-- --

தபால் மூலம் வாக்களிக்க தகுதியுடையவர்கள் யார்?

3

மிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், யாரெல்லாம் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என்ற பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் கீழ், 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் தபால் வாக்கு அளிக்கத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கான நடைமுறை மிகவும் எளிமையானது. தகுதியுள்ள வாக்காளர்கள் படிவம் 12D (Form 12 D)-ஐப் பூர்த்தி செய்து, தேர்தல் அறிவிக்கை வெளியான 5 நாட்களுக்குள் தங்கள் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (BLO) வழங்க வேண்டும். அதன் பிறகு, தேர்தல் அதிகாரிகளால் நியமிக்கப்பட்ட குழுவினர் நேரடியாக வாக்காளர்களின் வீட்டிற்கே வந்து வாக்குகளைச் சேகரிப்பார்கள். இந்தச் செயல்முறை வேட்பாளர்கள் முன்னிலையிலோ அல்லது அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையிலோ வெளிப்படையாக நடைபெறும்.

 

 

வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் பணியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள அத்தியாவசியத் துறை ஊழியர்களுக்கும் தபால் வாக்கு வசதி வழங்கப்படுகிறது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள பட்டியலின்படி கீழ்க்கண்ட துறையினர் தபால் வாக்களிக்கலாம்.

 

தெற்கு ரயில்வே, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள். போக்குவரத்து காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO), அகில இந்திய வானொலி, செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ஊடகவியலாளர்கள். இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் கடல்சார் துறை. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தேர்தல் பணி நடைபெறும் மையங்களிலேயே (Facilitation Centre) தங்களின் வாக்குகளைப் பதிவு செய்து ஒப்படைக்க வேண்டும். அங்கு ரகசியமாக வாக்களிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

 

ராணுவத்தினர் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் (Service Voters)
ராணுவப் பணியில் உள்ளவர்களுக்கு மின்னணு முறையில் தபால் வாக்குகள் (ETPBS) அனுப்பப்படும். அவர்கள் அந்த வாக்குகளைப் பதிவிறக்கம் செய்து, வாக்களித்த பிறகு எவ்வித அஞ்சல் கட்டணமுமின்றி திருப்பி அனுப்பலாம்.

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை மார்ச் 30-ம் தேதி வெளியாகிறது. தபால் மூலம் அளிக்கப்படும் அனைத்து வாக்குகளும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 4-ம் தேதி காலை 8 மணிக்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரை (RO) சென்றடைய வேண்டும். அதற்குப் பிறகு வரும் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. வாக்காளர்களின் வசதிக்காகவும், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் இந்த விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

Right Menu Icon