கோவையில் 2 தொகுதிகளை குறி வைத்த அண்ணாமலை..!
என்.டி.ஏ கூட்டணியில் தொகுதிப்பங்கீடு ஓரளவிற்கு முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், கோவையில் இரு தொகுதிகளை தேர்வு செய்து ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு, பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலிடம் முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மே 4-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க, நாம் தமிழர் கட்சி, ராமதாஸ் சசிகலா கூட்டணி என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இதில் த.வெ.க, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதனிடையே தி.மு.க. அ.தி.முக. கட்சிகள் தொகுதிப்பங்கீட்டை ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இதில் அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க. கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலில், 20 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறை கூடுதலாக 7 தொகுதிகள் சேர்த்து 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதனால் பா.ஜ.க பிரமுகர்கள் பலரும் தேர்தலில் போட்டியிட தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்தித்து பேசி வருவதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தின் முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பியூஷ் கோயலை சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த 3 நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் கோவையில், ஆலோசனையில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை, பியூஷ் கோயல் தமிழகத்திற்கு வந்தபோது, அவரை வரவேற்க வராத நிலையில், தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனிடையே அண்ணாமலை ஆலோசனை நடத்தியபோது பலரும் அவர் கோவையில் போட்டியிட வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், கோவையில் கவுண்டம்பாளையம் அல்லது சிங்காநல்லூர் தொகுதிகளை தனக்கு ஒதுக்குமாறு பியூஷ் கோயலை சந்தித்த அண்ணாமலை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2021 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்த நிலையில், இந்த முறை கோவையில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதே சமயம், கோவையில் 2 தொகுதிகளை பா.ஜ.க.வுக்கு ஒதுக்க அ.தி.மு.க சம்மதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.





