--- --:--:-- --

மறைந்த தலைவர்கள் சிலைகளை திரையிட்டு மறைக்க வேண்டாம்..!

4

மிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகளைத் திரையிட்டு மறைக்க வேண்டாம் என தேர்தல் ஆணையம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு (GCC) அறிவுறுது்தியுள்ளது.

 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக மார்ச் 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், அதனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்.

 

தேர்தல் முடிவு வெளியாகும்வரை இந்த விதிகள் அமலில் இருக்கும். இந்த சமயத்தில் அரசியல் தலைவர்களின் சிலைகள் திரையிட்டு மறப்பது வழக்கம். அதே சமயம் இந்த தேர்தலில், மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

இது குறித்து தேனாம்பேட்டை மண்டல செயற்பொறியாளர் கூறுகையில், “தலைவர்களின் படங்கள் ஏற்கனவே சமூக ஊடகங்களிலும் மற்ற இடங்களிலும் உள்ளன. இரண்டாவதாக, இது அந்தத் தலைவர்களுக்குச் செலுத்தும் மரியாதையாகவும் கருதப்படுகிறது என்று கூறியுள்ளார்.

 

இதனிடையே நேற்று (மார்ச் 17) ரிப்பன் மாளிகையில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் இணை ஆணையர் (கல்வி) கே.கற்பகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திருமண மண்டப உரிமையாளர்கள், அடகுக்கடை உரிமையாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது: வாக்காளர்களுக்கு ஆசை வார்த்தை காட்டும் வகையில், அடகு கடைகளில் டோக்கன்கள் மூலமாகவோ அல்லது வேட்பாளர்களின் முகவர்கள் மூலமாகவோ அடகு வைத்த நகைகளை மொத்தமாகத் திருப்புவதற்கு உதவக்கூடாது என அடகுக்கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல், திருமண மண்டபங்கள், சமூக நிகழ்வுகள் என்ற பெயரில் அரசியல் கூட்டங்களை நடத்த அனுமதியளிக்கக் கூடாது. பண விநியோகம், பரிசுப் பொருட்கள், உடைகள் அல்லது உணவு வழங்குதல், அரசியல் பதாகைகள் மற்றும் கட்-அவுட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

விடுதி உரிமையாளர்கள் தங்கும் விருந்தினர்களின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் பணிகளுக்காக வருபவர்கள், பிரசாரம் முடிந்ததும் விடுதியைக் காலி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, ரிப்பன் மாளிகையில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. இது குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா உதவி எண்: 1800 425 7012 செயலி: cVIGIL app தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுடனான தனிப்பட்ட கூட்டத்தில், சேமிப்புக் கணக்குகளில் 10 லட்ச ரூபாய்க்கு மேல் நடைபெறும் பரிமாற்றங்கள் கண்காணிக்கப்பட்டு, வருமான வரித்துறைக்குத் தெரிவிக்கப்படும். வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகளின் கணக்குகளில் இருந்து 1 லட்ச ரூபாய்க்கு மேல் நடக்கும் வழக்கத்திற்கு மாறான பணப் பரிமாற்றங்கள் குறித்துத் தகவல் அளிக்கப்பட வேண்டும். தினசரி பணப்பரிமாற்ற அறிக்கைகளைத் தேர்தல் செலவினக் கண்காணிப்புக் குழுவிடம் வங்கிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon