--- --:--:-- --

2026 முதல் புதிய வருமான வரி விதிகள்..!

3

ந்தியாவின் வரி விதிப்பு முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, தற்போதைய 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக வருமான வரிச் சட்டம் 2025 கொண்டு வரப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக, வரும் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள புதிய வருமான வரி விதிகள் குறித்த வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

 

இந்த புதிய விதிகள் குறிப்பாகச் சம்பளதாரர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெருநிறுவனங்களில் பணிபுரிபவர்களின் வரி கணக்கீட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விதிகளின்படி, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் தங்குமிட வசதி, கார், பரிசுப் பொருட்கள் மற்றும் உணவு போன்ற சலுகைகளுக்கான வரி கணக்கீட்டு முறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

 

தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு நிறுவனம் வீடு வழங்கினால், அந்த நகரத்தின் மக்கள் தொகையைப் பொறுத்து வரி கணக்கிடப்படும். 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வசிப்பவர்களுக்குச் சம்பளத்தில் 10 சதவீதமும், குறைந்த மக்கள் தொகை கொண்ட இடங்களில் 5 முதல் 7.5 சதவீதமும் வரியாகக் கணக்கில் கொள்ளப்படும்.

 

ஒருவேளை நிறுவனம் வாடகைக்கு எடுத்து வீடு வழங்கினால், உண்மையான வாடகை அல்லது சம்பளத்தில் 10 சதவீதம் இதில் எது குறைவோ அதுவே வரிக்குரிய சலுகையாகக் கருதப்படும். அதேபோல், நிறுவனங்கள் வழங்கும் கார் வசதிக்கும் நிலையான வரி மதிப்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 1.6 லிட்டர் இன்ஜின் திறனுக்கு உட்பட்ட கார்களுக்கு மாதம் 5,000 ரூபாயும், அதற்கு மேற்பட்ட திறனுள்ள கார்களுக்கு 7,000 ரூபாயும் வரிக்குரிய வருமானமாகக் கணக்கிடப்படும். ஓட்டுநர் வசதி வழங்கப்பட்டால் கூடுதலாக 3,000 ரூபாய் சேர்க்கப்படும்.

 

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (PF), தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) போன்ற ஓய்வூதிய நிதிகளில் நிறுவனம் செலுத்தும் பங்களிப்பு ஆண்டுக்கு 7.5 லட்ச ரூபாயைத் தாண்டினால், அந்த கூடுதல் தொகைக்கு வரி விதிக்கப்படும். இது அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு முக்கிய மாற்றமாகும். மேலும், நிறுவனத்திடம் இருந்து வட்டி இல்லா அல்லது குறைந்த வட்டியில் கடன் வாங்கும் ஊழியர்களுக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வசூலிக்கும் வட்டி விகிதத்தின் அடிப்படையில் அந்தச் சலுகை வரிக்குரிய வருமானமாகக் கருதப்படும். இருப்பினும், 2 லட்ச ரூபாய் வரையிலான கடன்களுக்கும், குறிப்பிட்ட மருத்துவச் சிகிச்சைக்காகப் பெறப்படும் கடன்களுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

பண்டிகை காலங்களில் நிறுவனங்கள் வழங்கும் பரிசுகள் மற்றும் வவுச்சர்களுக்கான வரி விலக்கு வரம்பு 15,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் பெறப்படும் பரிசுகள் முழுமையாக வரிக்கு உட்படுத்தப்படும். அலுவலக நேரத்தில் வழங்கப்படும் உணவைப் பொறுத்தவரை, ஒரு வேளை உணவின் மதிப்பு 200 ரூபாய் வரை இருந்தால் அதற்கு வரி கிடையாது. இது கேன்டீன் உணவுகள் மற்றும் உணவு வவுச்சர்களுக்கும் பொருந்தும். தொழில்நுட்ப ரீதியாக, இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்களின் வருவாய் 2 கோடி ரூபாயைத் தாண்டினாலோ அல்லது 3 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டிருந்தாலோ, அவை இந்தியாவிற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும்.

 

இந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் 2026-27 நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்பதால், வரி செலுத்துவோர் தங்களின் சம்பளக் கட்டமைப்பு மற்றும் முதலீடுகளை இப்போதே திட்டமிடுவது அவசியமாகும். வரி கணக்கீடுகளை எளிமையாக்குவதும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதுமே இந்த புதிய விதிகளின் முக்கிய நோக்கமாகும்.

Right Menu Icon