--- --:--:-- --

காரில் எரிந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு..!

2

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே, எரிந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளையிலிருந்து ஆத்தங்கரை செல்லும் சாலையில், பிரதான பாதையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் இரண்டு பனைமரங்களுக்கு இடையே கார் ஒன்று முற்றிலும் எரிந்த நிலையில் கண்டறியப்பட்டது.

 

அந்தக் காரில் இருந்தவர்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் கருகி சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காருக்குள் இருந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முகமது ரபி, நஸ்ரின் பாத்திமா மற்றும் அவர்களது இரண்டு பெண் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.

 

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, உயிரிழந்த முகமது ரபி குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்த தங்களது சொந்த வீட்டை விற்றுவிட்டு, நாகர்கோவிலுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கார் நிறுத்தப்பட்டு, பதிவெண் கூடத் தெரியாத அளவிற்கு முற்றிலும் தீக்கிரையாகியுள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

 

 

இந்தச் சம்பவம் ஒரு விபத்தாக இருக்க வாய்ப்பில்லை என போலீசார் கருதுகின்றனர். கார் நிறுத்தப்பட்டிருந்த விதம் மற்றும் இடம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, இது கொலையா? அல்லது குடும்பத்தினர் எடுத்த தற்கொலை முடிவா? என்ற இரு வேறு கோணங்களில் திசையன்விளை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

தடைய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, காரின் எஞ்சின் எண் மற்றும் பிற ஆதாரங்களைக் கொண்டு மேலதிக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கருகி பலியான இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

Right Menu Icon