விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள்..!
தன்னை எதிர்ப்பதில் திமுக மற்றும் அதிமுக இடையே மறைமுக டீலிங் இருப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தவெக ஆட்சிக்கு வந்தால் பயிர் கடனை ரத்தும் செய்யும் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் விஜயின் தவெக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பச்சை நிற துண்டை போட்டுக் கொண்டு பேசிய விஜய், அடுத்த ஜென்மத்தில் தான் விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார். இது மற்றவர்களுக்கு தான் “ELECTION” தனக்கு “EMOTION” என்று கூறிய விஜய், தன்னை எதிர்ப்பதில் திமுக மற்றும் அதிமுக இடையே மறைமுக டீலிங் இருப்பதாக அக்கட்சிகளின் பெயர்களை குறிப்பிடாமல் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே இல்லை என்று கூறினார். மேலும், ஜனநாயகன் படத்திற்கு, பட்டும் படாமல் குரல் கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி என்றும் தெரிவித்தார். தவெக ஆட்சிக்கு வந்தால், உரத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என்று கூறிய விஜய், 5 ஏக்கர் நிலம் வரை உள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிரான திட்டங்களை நிராகரிப்போம் என்றும், நெல் கொள்முதல் நிலையங்களில் கமிஷனாக பணம் வாங்காமல் பார்த்துக் கொள்ளப்படும் எனவும் அவர் வாக்குறுதி கொடுத்துள்ளார். மீனவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும் என்றும் தவெக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




