திமுக கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி..!
2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தங்களுக்கான ஆதரவு தளத்தை விரிவுபடுத்துவதில் அனைத்துக் கட்சிகளுமே தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில் இன்று எஸ்டிபிஐ (SDPI) கட்சிக்கு திமுக தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி இடம்பெற்று இருந்தது. தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால், அந்த கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ கட்சி அண்மையில் வெளியேறியது. இருப்பினும் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இதுவரை கூட்டணி குறித்த முடிவை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இதற்கிடையே திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, SDPI கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் தெகலான் பாகவி மற்றும் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் செல்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்பில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு, அக்கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் குறித்து முதற்கட்ட ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே மனிதநேய மக்கள் கட்சி (MHMC), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகள் உள்ளன. இந்நிலையில், சிறுபான்மையின வாக்குகளை மேலும் ஒருமுகப்படுத்தும் நோக்கில் SDPI கட்சிக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவில் தொகுதிப் பங்கீடு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.





