--- --:--:-- --

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை உடன் இன்று பிரியாவிடை..!

3

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார். அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர், தகைசால் தமிழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம் என்று அறிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரான நல்லகண்ணு, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒன்றாம் தேதி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

கடந்த இரு நாள்களாக அவரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், நேற்று உயிர் பிரிந்தது. நேற்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லகண்ணு நேற்று பிற்பகல் 1.55 மணிக்கு காலமானதாகவும் தெரிவிக்கப்பட்டுளது.

 

அதைத்தொடர்ந்து நல்லகண்ணுவின் உடல் பதப்படுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

 

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நல்லகண்ணு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, தமாகா தலைவர் ஜிகே வாசன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

 

நடிகர்கள் நாசர், சத்யராஜ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பா.ரஞ்சித், வெற்றி மாறன் ஆகியோரும் நல்லகண்ணு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணுவின் உடலுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தவைவர் நயினார் நாகேந்திரன், விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நல்லகண்ணுவின் தியாகங்கள் நிறைந்த போராட்ட வாழ்வு, மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களாலும் நல்லகண்ணு பெரிதும் மதிக்கப்பட்டார் என்று பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் நல்லகண்ணு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிடோர் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற தகைசால் தமிழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நல்லகண்ணுவின் விருப்பப்படி மாணவர்களின் படிப்புக்காக சென்னை மருத்துவ கல்லூரிக்கு அவரின் உடல் தானமாக அளிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 3 மணி வரை அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. பின்னர் கட்சியினர் அணிவகுப்போடு மருத்துவக் கல்லூரியில் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது.

Right Menu Icon