சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்க பரிசீலனை..!
இந்தியாவில் இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் ஏ,ஐ.மாநாட்டில் பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள் குறித்து சமூக ஊடக நிறுவனங்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், முன்னேறிச் செல்வதற்கான சிறந்த வழியைத் தேர்ந்தெடுப்போம் என்றும் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில், டீப்ஃபேக் வீடியோக்கள் குறித்துப் பேசிய அமைச்சர், டீப்ஃபேக் தொடர்பான சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, எனவே இதற்கு இன்னும் கடுமையான ஒழுங்குமுறைகள் தேவை. இது குறித்துத் தொழில்துறையினருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளை விட மிகவும் கடுமையானதாக இருக்கும். சட்டத்தை மேலும் வலுப்படுத்த நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்.
சமூக வலைதளங்களால் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அத்தகைய தீங்குகளில் இருந்து குழந்தைகள் மற்றும் சிறார்களை பாதுகாகக் வேண்டியது அவசியம். இதன் காரணமாக வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள் குறித்து சமூக ஊடக நிறுவனங்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், முன்னேறிச் செல்வதற்கான சிறந்த வழியைத் தேர்ந்தெடுப்போம் இந்தியாவில் சமூகவலைளங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற தளங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதித்த உலகின் முதல் நாடு ஆஸ்திரேலியா. இதில் பெற்றோரின் அனுமதி என்ற விதிமுறைக்கும் இடமில்லை. விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய டாலர் பதிப்பில் சுமார் 5 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம். அதேபோல் பிரான்ஸ் நாட்டில், 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க சட்டம் இயற்றியுள்ளது. இருப்பினும், பெற்றோரின் அனுமதியுடன் சில விலக்குகள் அளிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச வயதை 13-லிருந்து 15-ஆக உயர்த்த நார்வே முடிவு செய்துள்ளது. குழந்தைகளைப் பாதுகாக்க இது அவசியம் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவைப் போலவே, பிரிட்டனிலும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை அல்லது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அரசும் ஆலோசித்து வருகிறது.
ஸ்பெயின் மற்றும் டென்மார்க் நாடுகளும் இந்த நடவடிக்கைகைய மேற்கொண்டுள்ளது. ஸ்பெயினில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கும், டென்மார்க் மற்றும் கிரீஸ் நாடுகளில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கும் சமூக ஊடகக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரப் பணிகள் நடந்து வருகின்றன. அதே சமயம் இந்தியாவும் சமூக ஊடக நிறுவனங்களுடன் இணைந்து, சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான சரிபார்ப்பு (Verification) முறைகள் குறித்து ஆலோசித்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




