மோடி மதுரை பயண தேதி மாற்றம்..!
சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணியில் முதல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, அடுத்து பிப்ரவரி 28-ந் தேதி மீண்டும் மதுரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு, கூட்டணியில் பல கட்சிகளை இணைப்பது என தொடர்ந்து அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பா.ஜ.க. – அ.தி.மு.க என்.டி.ஏ கூட்டணியில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க. சார்பில் மத்திய தலைவர்கள் தமிழகத்தில் வந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, செங்கல்பட்டு மதுராந்தகத்தில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, அடுத்து பிப்ரவரி 28-ந் தேதி மதுரைக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பயணம் தற்போது மாற்றம் செய்யப்பட்டு, மார்ச் 1-ந் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வருவார் என்று தமிழக பா.ஜ.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடி தனது மதுரை பயணத்தின் போது புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் செல்ல அதிக வாய்ப்புள்ளதாகத் கூறியுள்ளார். மேலும், திருப்பரங்குன்றத்தில் புனித தீபம் ஏற்றுவதில் பெரும்பான்மை சமூக மக்களிடையே நீண்ட காலமாகக் கவலை நிலவி வருகிறது. பிரதமரின் வருகைக்குப் பிறகு, அங்கு தீபம் ஏற்றுவது சாத்தியமாகும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனவே, பிரதமர் அங்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையச் சாலைக்கு அருகிலுள்ள மண்டேலா நகரில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) இந்த ஆண்டின் 2-வது பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சி ரீதியான முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்ட நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். சாத்தியமான கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மூத்த தலைவர்கள் வி.பி. துரைசாமி மற்றும் ஜி. பாலச்சந்திரன் ஆகியோரைக் கொண்ட இருவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மத்திய பட்ஜெட் குறித்துப் பேச 67 நட்சத்திரப் பேச்சாளர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களால் தேர்தல் சுற்றுப்பயணக் குழுவிலிருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, திருப்பூர் தெற்குப் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.





